சென்னை கோயம்பேடு நியூ காலனி 8-வது தெருவைச் சேர்ந்தவர் 30 வயதுடைய பூவரசி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தீபக் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 9 வயதில் தருண் என்ற மகன் உள்ளார். தருணுக்கு ஒன்றரை வயது இருந்தபோது, கணவன் தீபக் மற்றும் பூவரசி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தீபக் மனைவி மற்றும் மகனைப் பிரிந்து சென்றுள்ளார். அதன்பிறகு, மகனுடன் தனியாக வசித்து வந்த பூவரசி, கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பூவரசிக்கு தமிழ்ச்செல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. பின்னர் கடந்த மூன்று மாதங்களாக பூவரசி தனது மகன் மற்றும் தமிழ்ச்செல்வன் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இதற்கிடையே, பூவரசிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருப்பதாகச் சந்தேகித்த தமிழ்ச்செல்வன், அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில்,கடந்த (செப் 29) பூவரசியும் தமிழ்ச்செல்வனும் வெளியே சென்றுவிட்டு இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது இருவரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் பேருந்து நிலையத்தில் இருந்தபோது, அடையாளம் தெரியாத சில பெண்களுக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தப் பெண்கள் தமிழ்ச்செல்வனைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்ட பூவரசி, தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாகப் பேசாமல் அமைதியாக இருந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன், பூவரசியிடம் தகராறு செய்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்ற தமிழ்ச்செல்வன், பூவரசியைச் செல்போனில் தொடர்புகொண்டு “உன் மகனை கொல்ல போறேன்” என தருணைக் கொலை செய்யப்போவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பூவரசி பதற்றத்துடன் வீட்டிற்கு விரைந்துள்ளார்.
இதற்கிடையே, வீட்டிற்கு சென்று தமிழ்செல்வனிடன் தருண் “என் அப்பா இப்படி வந்து இருக்கீங்க என்ன ஆச்சு” என கேட்ட நிலையில் சிறுவனிடம் பேசிய அவர் ஆத்திரமடைந்து தருணை கொலை செய்திருக்கிறார். பின்னர் பூவரசியை தொடர்புகொண்ட தமிழ்ச்செல்வன், சிறுவன் தருணைக் கொலை செய்துவிட்டதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பூவரசி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, சிறுவன் தருண் உயிரிழந்த நிலையில் கட்டிலுக்கு கிடந்துள்ளார். இதைக் கண்டு அவர் கதறி அழுதுள்ளார். அவரது அழுகைச் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோயம்பேடு போலீசார், சிறுவன் தருணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு (KMC) அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பூவரசிக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மதுபோதையில் இருந்த தமிழ்ச்செல்வன் சிறுவன் தருணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு தப்பியோடியதாகத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தப்பியோடிய தமிழ்ச்செல்வனைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பூவரசி அதிக மது போதையில் இருந்ததால் அவரிடம் விசாரணை தொடக்கத்தில் விசாரணை நடத்துவதில் சிரமம் இருந்த நிலையில் போதை தெளிந்த பிறகு விசாரணை நடத்தியுள்ளனர். அவர் தெளிந்த பின்னர் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. குடும்பத் தகராறில் 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் கோயம்பேடு பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்