“13 வயது சிறுவனுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை” - நட்பாகப் பழகி அத்துமீறிய வாலிபர்.. கூலி தொழிலாளி போக்சோவில் கைது!

இதனால் அச்சமடைந்த சிறுவன் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் மன உளைச்சலில் இருந்திருக்கிறார்...
Krishnagiri POCSO Case
Krishnagiri POCSO Case
Published on: 
Updated on: 
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே, 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 30 வயது தொழிலாளியைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மத்தூர் அருகேயுள்ள பள்ளியில் 13 வயது சிறுவன் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய அருண் என்பவர் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் 13 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் அருண் சிறுவனிடம் நட்பாகப் பழகி வந்த நிலையில் சிறுவன் தினமும் அருண் உடன் சென்று விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். நாளடைவில் மாணவனிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மேலும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சிறுவன் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.

சிறுவனின் அமைதியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அருண் தொடர்ந்து, அவரது நடவடிக்கைகள் எல்லை மீறியதாகக் கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவன் இதுகுறித்து தனது பள்ளி நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவனின் நண்பர்கள் இந்தத் தகவலைப் பள்ளித் தலைமையாசிரியரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியர், உடனடியாக குழந்தைகள் நலக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்த குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள், மாணவனிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், புகாரில் தொடர்புடைய அருணைக் கைது செய்தனர். மேலும், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவனுக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்