“10 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமையா?” - கபடி பயிற்சியாளர் ராஜு வழக்கில் திடீர் திருப்பம்.. வீராங்கனையின் தாய் வைத்த புகார்!

ராஜு சிறையில் இருந்தபோதும், சிலரின் வழிகாட்டுதலின்பேரில் புகார் அளிக்க வரும் சிறுமிகள் அச்சுறுத்தப்படுவதாக...
Kabaddi Coach Raju Bail Hearing
Kabaddi Coach Raju Bail Hearing
Published on: 
Updated on: 
2 min read

கபடி வீராங்கனையிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கைது செய்யப்பட்டு, 100 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் கபடி பயிற்சியாளர் ராஜுவுக்கு ஜாமீன் கோரிய வழக்கு நேற்று (நவ 03) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதற்கிடையே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், சிறையிலிருந்து வெளியே விடக்கூடாது என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சரண்யா தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சரண்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், பயிற்சியாளர் ராஜு இதுவரை 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டினார்.

தற்போது வரை 4 சிறுமிகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதாகவும், மேலும் சில குழந்தைகள் அச்சம் காரணமாகப் புகார் அளிக்காமல் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ராஜு சிறையிலிருந்து வெளியே வந்தால் மற்ற சிறுமிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என மேல்முறையீடு செய்துள்ளதாகக் கூறினார். ராஜு சிறையில் இருந்தபோதும், சிலரின் வழிகாட்டுதலின்பேரில் புகார் அளிக்க வரும் சிறுமிகள் அச்சுறுத்தப்படுவதாக சரண்யா குற்றம்சாட்டினார். குறிப்பாக, நேற்று தனது மகளைப் பின்தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட நபர்களையும், ராஜுவின் உறவினர்களையும் அனுப்பி மிரட்டியதாகத் தெரிவித்தார்.

ராஜு வெளியே வந்தால் தனது மகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்றும் அச்சம் இருப்பதாக கூறினார். தனது மகள் ஆசியப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டதாகவும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலரும் தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்ததாகவும் சரண்யா தெரிவித்தார். ஆனால், அந்தப் பணம் தொடர்பான விவரங்கள் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், தனது மகள் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

தனக்கு உடல்நிலை சரியில்லாததால் மகளிடம் பணம் கேட்டபோது, கபடி அசோசியேஷன் தலைவர் சோலைராஜாவுக்குப் பணம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த துரைப்பாண்டி, சாவாஸ் மற்றும் தேனியைச் சேர்ந்த நாதர் ஆகியோர் கார்த்திகாவின் அம்மாவை சந்தித்து சோலைராஜாவிடம் பணம் கொடுக்குமாறு வற்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். திறமைக்கு மதிப்பில்லையா எனக் கேள்வி எழுப்பியபோதும், தன்னைச் சம்மதிக்க வைத்ததாகவும், பின்னர் அவர்கள் மதுரைக்குச் செல்லப் பேருந்து டிக்கெட் எடுத்துக் கொடுத்து, தங்குவதற்கு அறையும் ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தார்.

Kabaddi Coach Raju Bail Hearing
Kabaddi Coach Raju Bail Hearing

அதன்படி மதுரைக்குச் சென்று சோலைராஜாவின் ஆதரவாளரிடம் ரூ.10 லட்சத்தைக் கொடுத்ததாகக் கூறினார். மேலும், தனது மகள் விளையாட அனுமதித்ததற்காக சோலைராஜாவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனத் தன்னை வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக துரைப்பாண்டி, சாவாஸ் ஆகியோர் தன்னிடம் செல்போனில் பேசியதற்கான ஆதாரங்களும், பணத்தைச் சோலைராஜாவிடம் கொடுக்குமாறு பயிற்சியாளர் ராஜு கூறியதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக சரண்யா தெரிவித்தார். இதற்கிடையே, தனக்குத் தெரியாமல் தனது மகளுக்குத் தனியாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதாகவும், அதிலிருந்த பணம் முழுவதையும் மகளின் கையெழுத்தைப் பெற்றுப் பணமாக எடுத்து, கபடி அணியின் கேப்டனாக உள்ள சுஜி என்பவரிடம் கொடுத்துள்ளதாகவும் சரண்யா குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக கண்ணகி நகர் காவல் நிலையத்தில் பண மோசடி புகார் அளித்ததாகவும், ஆனால் தனது மகளின் கையெழுத்துடன் பணம் எடுக்கப்பட்டதால் தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது எனக் காவல்துறையினர் கூறி விசாரணையைத் தவிர்ப்பதாகவும் தெரிவித்தார். தனது மகளுக்கு இன்னும் 17 வயது நிறைவடையவில்லை என்றும், அவர் தனது பாதுகாப்பில் இருந்தவர் என்பதால் பணம் தொடர்பாகக் கேள்வி கேட்க தனக்கு உரிமை இருப்பதாகவும் சரண்யா கூறினார். காவல்துறையினர் விசாரணை முடிந்துவிட்டதாகக் கூறி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், புகார் அளித்ததற்கும் போட்டி நடைபெற்றதற்கும் இடைப்பட்ட காலத்தில், யாரோ தூண்டுதலின் பேரில் தனது மகளைத் தன்னிடம் தெரிவிக்காமல் அழைத்துச் சென்றதாகவும் கூறினார். உனது தந்தை உடன் இருந்தால்தான் விளையாட்டில் முன்னேற முடியும் எனக் கூறி அனுப்பி வைத்ததாகவும், தற்போது தனது மகள் தந்தையின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் சரண்யா பணத்திற்காகப் புகார் அளிப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், தனது மகளின் எதிர்காலமே முக்கியம் என்றும், மகள் வெற்றி பெற்று பெற்ற பரிசுத்தொகையைத் துளியும் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆரம்பத்திலிருந்தே பயிற்சியாளருக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் தானே செய்ததாகவும், அதற்கான வரவு செலவு கணக்குகள் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார். தான் செலவு செய்த பணம், நகை உள்ளிட்டவற்றை விட மகளின் எதிர்காலமே முக்கியம் என்றும், பணத்தாசை தனக்கு இல்லை என்றும் தெரிவித்தார். இறுதியாக, சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படும் பயிற்சியாளர் ராஜுவைச் சிறையிலிருந்து வெளியே விடக்கூடாது என்றும், கபடி அசோசியேஷன் தலைவர் சோலைராஜா தொடர்பான புகார்கள் குறித்தும் விளையாட்டுத்துறை அமைச்சர் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.