கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கண்டகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பா. இவரது மனைவி 50 வயதுடைய சரசம்மா. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்திருக்கின்றனர். அதே பகுதியில் சிவப்பாவின் அண்ணன் சோமப்பா அவரது கூடுவதுடன் வசித்து வருகிறார். சோமப்பாவின் மகனான 27 வயதுடைய அசோக் சலூன் கடை ஒன்று வைத்து நடத்தி வந்திருக்கிறார்.
அசோக்கிற்கு அவ்வப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சமீப காலமாக சலூன் கடையில் வியாபாரம் சரிவர நடக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து அவர்கள் ஜோதிடம் பார்த்த போது யாரோ அசோக் குடும்பத்திற்கு செய்வினை வைத்திருப்பதாக ஜோதிடர் கூறியுள்ளார். இதனால் சரசம்மாவை சந்தேகித்த அசோக்கு இது குறித்து அவரிடம் கேட்டு வாக்குவாதம் செய்து வந்திருக்கிறார்.
இதனால் அடிக்கடி இரு குடுபத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் இரு குடும்பத்தினரையும் சமாதானம் செய்து வைத்திருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று(செப் 29) இரவு சுமார் 11 மணியளவில் மது போதையில் இருந்த அசோக், தனது சித்தி சரசம்மாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் சிவப்பாவும் சரசம்மாவும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர்களிடம் அசோக் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென ஆத்திரமடைந்த அவர், சரசம்மாவின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சரசம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற அசோக், நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம், தனது சித்தியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அசோக்கை கைது செய்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, காவல் ஆய்வாளர் சாவித்திரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரசம்மாவின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அசோக்கிடம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ‘செய்வினை’ செய்ததாக சித்தியுடன் ஏற்பட்ட தகராறில், மது போதையில் மகனே அவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்