மதுரையில், மது பாட்டில்களைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்துவிட்டு, வீட்டு வாசலிலேயே போதையில் தூங்கிய தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை கருப்பாயூரணி, ஒத்தவீடு பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பாயி. கணவரை இழந்த இவருக்கு 30 வயதில் அழகர் மற்றும் கணேசன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் அழகர் பெயிண்டராகவும், கணேசன் கூலித் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று (அக் 31) இரவு இருவரும் வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, தம்பி கணேசன் வாங்கி வைத்திருந்த 4 மதுபாட்டில்களில், அதிக போதையில் இருந்த அண்ணன் அழகர் 2 பாட்டில்களைக் குடித்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணேசன், அண்ணன் அழகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதில் கடும் ஆத்திரமடைந்த கணேசன், வீட்டில் இருந்த இரும்பு ராடை எடுத்து அழகரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அழகர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தாக்குதலுக்குப் பயன்படுத்திய இரும்பு ராடை வீட்டிற்குள் மறைவான இடத்தில் ஒளித்து வைத்த கணேசன், அதிக மதுபோதையில் இருந்ததால் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாமல் வீட்டு வாசலிலேயே தூங்கிவிட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே, உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த தாய் கருப்பாயி, இன்று (நவ 01) காலை வீட்டிற்குத் திரும்பியபோது மூத்த மகன் அழகர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அண்ணா நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அழகரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டு வாசலில் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனைப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலைக்குப் பயன்படுத்திய இரும்பு ராடையும் பறிமுதல் செய்து தடயங்களைச் சேகரித்தனர்.
மேலும் 4 மதுபாட்டில்களில் 2 பாட்டில்களை அண்ணன் குடித்ததால் ஏற்பட்ட தகராறு தான் கொலைக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது பாட்டில்களைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் உடன்பிறந்த அண்ணனையே தம்பி அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.