“நள்ளிரவில் வெட்டி கொல்லப்பட்ட திமுக பிரமுகர்” - மணல் அள்ளும் விவகாரத்தால் ஏற்பட்ட பகை.. யார் அந்த பொலிரோ கார் மர்ம கும்பல்?

கலாநிதியை சுற்றி வளைத்து, முகம், கழுத்து, கை உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி...
kalanidhi
kalanidhi
Published on
Updated on
1 min read

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி தாலுகா இலுப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதுடைய கலாநிதி. இவர் திமுக முன்னாள் கள்ளிக்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளராக இருந்து, அரசியல் பணிகளுடன் உள்ளூர் தொழில்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் கலாநிதி, கே.சென்னம்பட்டியைச் சேர்ந்த 30 வயதுடைய தனது நண்பர் ஹரிஹரன் மற்றும் தனது உறவினரான 25 வயதுடைய அஜித்துடன் இருசக்கர வாகனத்தில் குராயூர் நோக்கி சென்றுள்ளனர். அவர்கள் சோளம்பட்டி குதிரை கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த பொலிரோ கார் ஒன்று திடீரென அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக மோதியுள்ளது.

எனவே நிலைதடுமாறி மூவரும் சாலையில் கீழே விழுந்த நிலையில் பொலிரோ காரில் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு மர்ம கும்பல் இறங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அச்சமடைந்த ஹரிஹரன், உயிர் தப்பும் நோக்கில் அங்கிருந்து ஓடி தப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கும்பல் கலாநிதியை சுற்றி வளைத்து, முகம், கழுத்து, கை உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கின்றனர். மேலும் கலாநிதியை காப்பாற்ற முயன்ற அவரது உறவினர் அஜித்தையும் அந்த கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வெட்டுக் காயமடைந்த அஜித், உயிர் தப்பி பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி கலாநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த அஜித்தையும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த கலாநிதிக்கும் மற்றொரு தரப்பினருக்கும் ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் மற்றும் தொடர்புடைய நபர்கள் உள்ளனரா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தை திட்டமிட்டு காரால் மோதிய பின்னர், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் முன்னாள் திமுக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் திருமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com