

மதுரை மாவட்டம், புதுவிளாங்குடி சொக்கநாதபுரம் 2ஆவது தெரு பகுதியை சேர்ந்த யுவராஜ். இவர் மீது கொலை முயற்சி, வீட்டில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் யுவராஜ்க்கும் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான சபாபதி, ஷ்யாம்குமார் ஆகியோருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட பிரச்சனையின் போது சபாபதியின் அம்மாவை யுவராஜ் அடித்ததாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக யுவராஜ் மற்றும் சபாபதியின் கும்பலுக்கும் இடையே அடிக்கடி மோதல் நீடித்துவந்துள்ளது. இதனிடையே யுவராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயம்புத்தூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என நினைத்து மதுரைக்கு வந்திருக்கிறார் யுவராஜ். இதனை தொடர்ந்து தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்துவிட்டு இரவில் யுவ்ராஜ் அவரது நண்பரான 19 வயதுடைய சித்தன் என்பவருடன் வீட்டு முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஷ்யாம் , சபா , சஞ்சய் விக்கி, பிரசாத் உள்ளிட்ட 7 நபர்கள் கொண்ட கும்பலானது கையில் ஆயுதங்களுடன் வந்து “நீ மதுரைக்குள் வந்தால் எங்களுக்குள் தெரியாதா? நீ எல்லாம் உயிரோடவே இருக்க கூடாது” என்று கூறி யுவராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது அந்த கும்பலை யுவராஜூடன் இருந்த சித்தன் தடுக்க முயற்சி செய்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த கும்பல் சித்தன் தலையில் வெட்டியுள்ளனர். இதனை பார்த்த யுவராஜின் சகோதரிகள் கத்தியபடி ஓடிவந்ததை பார்த்த ஷ்யாம், சபாபதி தலைமையிலான கும்பல் அப்பகுதியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
பின்னர் யுவ்ராஜின் சகோதரிகள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயங்களுடன் கிடந்த யுவராஜ் மற்றும் சித்தன் ஆகிய இருவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து தகவலறிந்த கூடல்புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு சபாபதி, ஷ்யாம்குமார் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே சிகிச்சையில் இருந்த சித்தன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கானது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் கொலையாளிகளை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
தனது அம்மாவை அடித்த யுவராஜை பழிவாங்குவதற்காக கொலை செய்ய வந்த சபாபதி கும்பலால் யுவராஜை காப்பாற்ற முயன்ற சித்தன் கொலையான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக யுவராஜ் மற்றும் சபாபதி் கும்பலிடையே மீண்டும் தொடர் மோதலாக மாறி விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதால் சித்தனின் உடல் அரசு மருத்துவமனையில் இருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
