“மதுரையில் அடுத்தடுத்து நடந்த 3 கொலைகள்” - ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட வாலிபர்.. அச்சத்தில் மூழ்கிய பொதுமக்கள்!

திவாகர் மணியின் தலையில் கல்லால் தாக்கி, பின்னர் ஆயுதத்தால் வெட்டியுள்ளார்...
madurai murder
madurai murder
Published on
Updated on
2 min read

மதுரை மாநகரில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலை சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இரண்டு கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், தொடர்ந்து மதுரை மாநகரில் 3 கொலைகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

குடிபோதையில் நண்பர்களுக்குள் தகராறு

மதுரை மாநகர் சோலையழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி என்ற ‘கிரைம் மணி’ (30). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினரின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த (ஆக 04) - ஆம் தேதி இரவு மணி தனது நண்பரான திவாகர் (30) என்பவருடன் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்தியுள்ளார். பின்னர் இருவரும் பைக்கில் சென்றபோது, காவல்துறையினர் அவர்களை வழிமறித்து வாகன சோதனை மேற்கொண்டனர்.

செல்போனை பறிமுதல் செய்த போலீசார்

சோதனையின் போது இருவரும் மது போதையில் இருந்த நிலையில், அவர்கள் வந்த பைக்கையும் செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும், வீட்டிற்கு நடந்து செல்லுமாறும் அறிவுறுத்தி இருவரையும் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மணி மற்றும் திவாகர் இருவரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கல்லால் தாக்கி.. ஆயுதத்தால் வெட்டி கொலை

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த திவாகர் மணியின் தலையில் கல்லால் தாக்கி, பின்னர் ஆயுதத்தால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மணி உயிரிழந்தார். சம்பவத்துக்குப் பின்னர் திவாகர் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு திவாகரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்தவர் ஓட ஓட வெட்டி கொலை

இதனிடையே, மதுரை சிந்தாமணி கண்ணன் காலனி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரும் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முருகன் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு கடந்த (ஆக 03) - ஆம் தேதி வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படும் 4 பேர் கொண்ட மர்ம கும்பல், வீட்டின் அருகே அவரை திடீரென வழிமறித்துள்ளது.

தொடர்ந்து, முருகனை ஓட ஓட விரட்டி தாக்கி கொலை செய்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிந்தாமணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் முன்விரோதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணம் வசூல் விவகாரம்.. நண்பர்களே அடித்துக் கொலை

இதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக 01) - ஆம் தேதி இரவு மதுரை கூடல்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லையா நகர் பகுதியில் ஷிரிப்பிக்ராஜன் (22) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். அவர் தனது நண்பர்களான விக்னேஷ் (24), மகேஷ் (25) மற்றும் ஆனந்த் (25) ஆகியோருடன் மது அருந்தி கொண்டிருந்தபோது, பணம் வசூலிப்பது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நண்பர்கள் கிரிக்கெட் மட்டையால் ஷிரிப்பிக்ராஜனை தாக்கியதாகவும், இதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தப்பியோடியதாக கூறப்படும் நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் அதிகரிக்கும் அச்சம்

மதுரை மாநகரில் கடந்த சில தினங்களாகவே மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எனவே குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் மதுரை மாநகர காவல்துறையினர் வாகன சோதனை மற்றும் பூட் ரோந்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் காவல்துறையினரின் ரோந்து பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், குற்றப் பின்னணி கொண்ட நபர்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com