மனைவியை கொலை செய்து சாம்பலை கிணற்றில் கரைத்த கணவன்.. பிரிந்து வாழ்ந்தவரை சமாதானம் பேச அழைத்து வெறிச்செயல்!

உடலை எரித்து சாம்பலாக்கி அருகிலிருந்த கிணற்றில் கரைத்துவிட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்...
karthiga
karthiga
Published on
Updated on
2 min read

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதுடைய பிரபாகரன். இவருக்கு அம்பலக்காரன்பட்டி அருகே கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கார்த்திகா என்பவருடன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 வயதில் தேஜாஸ்ரீ என்ற மகள் உள்ளார். கடந்த ஓராண்டாக கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திகா, தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி கார்த்திகா வீட்டிற்கு சென்று "இனி பழைய பிரச்சினைகளை மறந்து மீண்டும் ஒன்றாக வாழலாம்" என்று மனைவியிடம் சமாதானம் பேசிய பிரபாகரன், அவரை தனது சொந்த ஊரான கொட்டக்குடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு கார்த்திகா நீண்ட நாட்கள் அவரது தாய்க்கு போன் செய்யாமல் இருந்து நிலையில், அவர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் கார்த்திகா பற்றிய தகவல் எதுவும் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் பிரபாகரன், கொட்டக்குடி கிராம நிர்வாக அலுவலர் (VAO) செல்வத்திடம் நேரில் சென்று, தனது மனைவி கார்த்திகாவை வயல்வெளியில் வைத்து கொலை செய்துவிட்டதாகவும், பின்னர் உடலை எரித்து சாம்பலாக்கி அருகிலிருந்த கிணற்றில் கரைத்துவிட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக மேலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாகரனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Admin

பிரபாகரன் கூறிய தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் வயல்வெளி மற்றும் கிணறு பகுதிகளில் தடயவியல் நிபுணர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உடல் எரிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இருந்து சாம்பல் மற்றும் பிற தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கார்த்திகா எவ்வாறு கொலை செய்யப்பட்டார்? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? திட்டமிட்டு இந்தச் செயலில் ஈடுபட்டாரா? அல்லது வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் பிரபாகரனின் நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் மற்றும் கரண் ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட பிரபாகரன் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த மனைவியை மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று நம்பவைத்து அழைத்துச் சென்று கொலை செய்து, உடலை எரித்து சாம்பலை கிணற்றில் கரைத்ததாக கூறப்படும் இந்தச் சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com