
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள மனஜூர் பகுதியை சேர்ந்தவர் 50 வயதான சுலைமான். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், திருமண புரோக்கர் பணி செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுலைமானுக்கு பக்கத்து ஊரில் வசித்து வரும் முஸ்தபா என்ற 30 வயது இளைஞருக்கு, திருமணத்திற்கு வரன் பார்க்க சொல்லி வேலை வந்திருக்கிறது. சுலைமானும் முஸ்தபாவிற்கு பெண் பார்க்க, கடந்த செப்டம்பர் மாதம் சுலைமான் பார்த்த பெண்ணுடன் முஸ்தபாவிற்கு திருமணம் நடந்தது.
திருமணம் செய்த முதல் மூன்று மாதங்கள் திருமண வாழ்க்கை நன்றாகவே சென்றிருக்கிறது. ஆனால் முஸ்தபாவின் மனைவி தனது பெற்றோர்களை முறையாக கவனித்து கொள்ளவில்லை, பெரியவர்களிடம் மரியாதையாக நடந்துகொள்வதில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதில் கோபித்துக்கொண்டு முஸ்தபாவின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு சமாதானப்படுத்தி அழைத்து வர சென்ற முஸ்தபாவிடம் பேச கூட விருப்பமில்லாத மனைவி அவரை சந்திக்க மறுத்துள்ளார்.. இதனால் கோபமடைந்த முஸ்தபா பெண் பார்த்து கொடுத்த சுலைமான் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
எனவே சுலைமானுக்கு போன் செய்து முஸ்தபா, தனக்கு தனது மனைவிக்கும் நடந்த சண்டைகளை பற்றி கூறி இதற்கு நீங்கள் தான் காரணம் என சுலைமானிடம் சண்டை போட்டுள்ளார். இந்நிலையில் முஸ்தபாவிற்கு ஆறுதல் சொல்ல நினைத்த சுலைமான் தனது இரண்டு மகன்களுடன் முஸ்தபா வீட்டிற்கு சென்றுள்ளார்.
மகன்களை வீட்டிற்கு வெளியே நிற்க வைத்துவிட்டு முஸ்தபாவின் வீட்டிற்குள் சென்றுள்ளார் சுலைமான். ஏற்கனவே கோபத்தில் இருந்த முஸ்தபா சுலைமானை நேரில் பார்த்ததும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். முதலில் பொறுமையாக இருந்த சுலைமான் ஒரு கட்டத்திற்கு பிறகு தானும் பேச துவங்கியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் சுலைமான். சுலைமானை பின் தொடர்ந்து வந்த முஸ்தபா அவர் வைத்திருந்த கத்தியால் சுலைமானை சரமாரியாக குத்தியுள்ளார்.பின்னர் கீழே சரிந்து விழுந்த சுலைமானின் கழுத்தை அறுத்துள்ளார் முஸ்தபா இதனை தடுக்க வந்த சுலைமானின் மகன்களையும் கத்தியால் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார் முஸ்தபா.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சுலைமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸ்தபாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்