
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 36 வயதான சிவ ஷண்முகம். இவர் மினி ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். சில மாதங்களிலேயே அந்த பெண்ணுக்கும் சிவ ஷண்முகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். எனவே சிவ ஷண்முகம் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள பெண் தேடி வந்துள்ளார்.
மதுரையை சேர்ந்த புரோக்கர்கள் மூலம் சிவ ஷண்முகம் விருதுநகரை சேர்ந்த 30 வயதான தீபா என்ற பெண்ணை பார்த்துள்ளார். கடந்த 6 -ஆம் தேதி சிவா ஷண்முகம் குடும்பத்தோடு மதுரை சேர்ந்த புரோக்கர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வைத்து தீபாவை பெண் பார்த்து சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர் புரோக்கருக்கு கமிஷனாக ஒரு லட்சம் ரூபாயையும், தீபாவின் அம்மா என்று அறிமுகம் செய்யப்பட்ட பெண்ணுக்கு வரதட்சணையாக ஒரு லட்சமும் கொடுத்துள்ளனர்.
அன்று இரவு புரோக்கர் வீட்டிலேயே தங்கிய சிவஷண்முகம், தீபா மற்றும் சிவ ஷண்முகத்தின் குடும்பத்தினர். மறுநாள் விடிந்ததும் மதுரை மாட்டுத்தாவணி கோவிலில் சிவசண்முகம் தீபாவை திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்ததும் தீபாவை அழைத்து கொண்டு தனது வீட்டிற்கு சென்ற சிவ ஷண்முகம் எட்டாம் தேதி தீபாவை அழைத்து கொண்டு தனது அக்கா வீட்டிற்கு விருந்திற்கு சென்றுள்ளார். அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து உறங்கிய நிலையில் காலை தீபா வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
தீபாவை காணவில்லை என பல்வேறு இடங்களில் தேடி அழைந்த சிவ ஷண்முகம் தீபா மற்றும் புரோக்கர் போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். அனைவரின் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதை அறிந்த சிவ ஷண்முகம் தான் ஏமாற்ற பட்டத்தை அறிந்து மனமுடைந்துள்ளார். திருமணமான இரண்டு நாட்களிலேயே மனைவி ஏமாற்றி விட்டு சென்றதால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த சிவ ஷண்முகம் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவ ஷண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தீபாவையும் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்த புரோக்கர்களையும் தேடி வருகின்றனர். திருமணமான நான்கு நாட்களில் புது மாப்பிளை தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.