பள்ளிகள், கல்லூரிகளை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அங்குள்ள குழந்தைகள் உள்ளிட்டோரை பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு, மிரட்டுவது போன்ற விஷயங்களை நாம் படத்தில் நிறைய பார்த்திருப்போம். ஆனால் ஒரு தனி ஆள் 13 லிருந்து 14 வயது வரை நிரம்பிய 17 குழந்தைகளை பிணைக்கைதிகளாக்கி மிரட்டிய சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எங்கே நடந்தது கடத்தல் சம்பவம்
மகாராஷ்டிராத் தலைநகர் மும்பையில் உள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் சில மாதங்களாகவே குழந்தை நட்சத்திரங்களுக்கான ஆடிஷன் நடந்து வருகிறது. இதில் 13 -இலிருந்து 17 வயதுக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட குழந்தைக்கு கலந்து கொண்டுள்ளனர். ஆனால் அங்கு வேலை செய்யும் ரோகித் ஆர்யா என்ற நபர் 17 குழந்தைகளைப் பணய கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று மதியம் 1.30 மணியளவில் போலீசாருக்குதகவல் கிடைத்துள்ளது. மேலும் குழந்தைகளின் கடத்தல் தொடர்பாக வீடியோ ஒன்றையும் கடத்தல்காரர் வெளியிட்டருந்தார், அதில், "நான் ரோஹித் ஆர்யா. தற்கொலை செய்துகொள்வதற்குப் பதிலாக, நான் இப்போது சில குழந்தைகளைப் பணய கைதிகளாகப் பிடித்துள்ளேன். எனக்குப் பெரிய கோரிக்கைகள் எதுவும் இல்லை. மிகவும் எளிமையான, தார்மீக ரீதியான கோரிக்கைகள் தான் உள்ளன. நான் சிலரிடம் பேச விரும்புகிறேன். சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.அவர்களின் பதில்களுக்கு என்னிடம் எதிர் கேள்விகள் இருந்தால், அதைக் கேட்க விரும்புகிறேன். ஆனால் இந்தப் பதில்கள் எனக்கு வேண்டும். வேறு எதுவும் வேண்டாம்.. நான் ஒரு பயங்கரவாதி இல்லை.. பணமும் கேட்கவில்லை. தன்னைத் தானும் குழந்தைகளையும் காயப்படுத்துவேன், எல்லாவற்றிற்கும் தீ வைத்துவிடுவேன்" என்று கூறியிருக்கிறார்.
சிலரிடம் பேச வேண்டும் என்று கூறியிருந்தாலும், அந்த வீடியோவில் யாருடன் பேச வேண்டும் என்பது குறித்து அவர் எதையும் சொல்லவில்லை. இந்த வீடியோ வெளியாகி மகாராஷ்டிரா முழுக்க பரபரப்பைக் கிளப்பியது.
போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
ஸ்டூடியோவிலிருந்து வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, பொவை மற்றும் சகிநாகா காவல் நிலையங்களிலிருந்து சில முக்கிய குழுக்கள் சம்பவ இடத்துக்கு சென்றன. முதலில் அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். குழந்தைகளை விட்டுவிட்டுச் சரணடைந்துவிடும்படி போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், அந்த நபர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் போலீசார் அதிரடி ஆபரேஷனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பாத்ரூம் வழியாக உள்ளே நுழைந்த போலீசார், ஆர்யாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் அவர் சுருண்டு விழுகவே, பின்னர் அங்கிருந்த குழந்தைகளைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட எல்லாக் குழந்தைகளும் மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஆர்யா, அருகே உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு அவர் சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்தார், சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், குற்றவாளி மனநிலை பாதிப்புடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
