Bad Touch-க்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்... அடுத்த நொடியே பெண்ணுக்கு ரயிலில் அரங்கேறிய கொடூரம்!

பெண் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் அந்த நபர் தனது தவறான நடத்தையைத் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது...
Mumbai Local Train Sexual Harassment Case
Mumbai Local Train Sexual Harassment Case
Published on: 
Updated on: 
2 min read

பொது இடத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகள் எந்த அளவுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரயிலில் பயணம் செய்த இளம்பெண் ஒருவரிடம் சக பயணி ஒருவர் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர் அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளியதாகப் புகார் எழுந்துள்ளது. இதில் ரயில் சக்கரத்தில் சிக்கிய பெண்ணின் இடது கை முழங்கைக்குக் கீழே துண்டிக்கப்பட்டுள்ளது. தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு 16 தையல்கள் போடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்தச் சம்பவம் நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டுக்குச் செல்வதற்காக ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது உடன் பயணம் செய்த ஆண் ஒருவர் அவரிடம் தகாத முறையில் தொட்டுப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த அவர், அந்த நபரிடம் ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்று கேட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், பெண் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் அந்த நபர் தனது தவறான நடத்தையைத் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் பொறுமையிழந்த பெண், தனது காலணியைக் கழற்றி அந்த நபரைத் தாக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பயணிகள் சிலர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இருப்பினும், அந்த நபர் தொடர்ந்து பெண்ணிடம் தகாத வார்த்தைகளைப் பேசியதுடன், தனது காலணியையும் அவர் மீது வீசியதாகக் கூறப்படுகிறது.

ரயில் நாய்காவ் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது நடைமேடையில் இறங்கிய பெண்ணுக்கும் அந்த நபருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் இருந்த அந்த நபர், பெண்ணை ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான இடைவெளியில் தள்ளியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக அவர் தண்டவாளம் அருகே விழுந்தார். உடனடியாக எழுந்து நடைமேடைக்கு ஏற முயன்றபோது ரயில் நகரத் தொடங்கியது. இதில் அவரது இடது கை ரயில் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தது. காயத்தின் தீவிரம் காரணமாக முழங்கைக்குக் கீழே அவரது கையை மருத்துவர்கள் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது. போரி்வலி பகுதியில் இருந்து விரார் நோக்கிச் சென்ற உள்ளூர் ரயிலில் பயணம் செய்தபோதுதான் இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது. நாய்காவ் ரயில் நிலையத்தில் பெண் தள்ளிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரயில் சென்ற பிறகு அங்கிருந்த காவலர் ஒருவரும் மற்ற பயணிகளும் இணைந்து காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவத்திற்குப் பிறகு அந்த நபர் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். ஆனால், ரயில் நிலையங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த ரயில்வே போலீசார், சில மணி நேரங்களிலேயே அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் பாலியல் தொல்லை மற்றும் கொலை முயற்சி தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண், தனது குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் தானே கவனித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். ஒரு கையை இழந்துவிட்டதால் இனி தனது வாழ்க்கையை எப்படித் தொடர்வது என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கு நீதி வேண்டும் என்றும், குற்றம் செய்த நபருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கொலை முயற்சிக்கான சட்டப்பிரிவு சேர்க்கப்படாதது குறித்து பெண்ணின் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதையடுத்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியினரின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். கட்சியின் நிர்வாகிகள் ரயில்வே காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து உரிய சட்டப்பிரிவுகளைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காகவே இத்தகைய கொடூரத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எவ்வளவு அவசியம் என்பதையும் இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.