

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடி வடக்கன் வளைவு பகுதியில் வசித்து வருபவர் மாதவன். இவரது மனைவி பூச்சியம்மாள் (70). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். பூச்சியம்மாள் நேற்று முன்தினம் மாலை சமயத்தில் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக தனது கணவரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், நீரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மாலையில் இருந்து பல்வேறு இடங்களில் பூச்சியம்மாளை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை சூரக்குடியில் அரசு பள்ளிக்கூடம் அருகில் உள்ள கால்வாய் பகுதியில் முகம் குப்பிறக்கவிழ்ந்த நிலையில் பூச்சியம்மாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சாலை ஓரமாக உள்ள வேப்ப மரத்தடியில் வேப்ப முத்துகள் சேகரிக்க வந்த கிராமத்தார்கள் சடலத்தைக் கண்டு உடனடியாக சதுர்வேத மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறப்பு படை போலீசார் உதவியுடன் கொலையாளிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு சிவகங்கையில் இருந்து 'லைலா' என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் சதுர்வேதமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சசிகலா, ஆனந்த ஜோதி மற்றும் திருப்பத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், உள்ளிட்ட தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வந்துள்ளனர். இது சம்பந்தமாக பூச்சியம்மாளின் கணவர் மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சாமுண்டீஸ்வரி (33) என்பவர், நேற்று முன்தினம் அடிக்கடி வீட்டிற்கு வந்து பூச்சியம்மாளை "பேசிக் கொண்டிருக்கலாம் வாருங்கள்" என அழைத்துள்ளார். அப்போது "வேலை இருக்கு" எனக் கூறி மூதாட்டி காலம் கடத்தி வந்த நிலையில், தனது கணவர் மாதவனிடம், "சாமுண்டீஸ்வரி கூப்பிட்டுகிட்டே இருக்கிறாள்" என்று சொல்லி விட்டு சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு சென்றுள்ளார்.
மனைவியை பின்தொடர்ந்து கணவர் மாதவனும் சென்றுள்ளார். அப்போது பூச்சியம்மாள், சாமுண்டீஸ்வரி வீட்டிற்குள் சென்றதை பார்த்துவிட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுள்ளார். மாலை 6 மணி அளவில் மாதவன் வீட்டிற்கு வந்த சாமுண்டீஸ்வரியின் கள்ளக்காதலன் சரவணன், "என்ன தாத்தா ஆச்சி வீட்டிற்கு வருகிறேன் என சொன்னார். ஆனால் வரவில்லை" என கூறியதை கண்டு அதிரிச்சி அடைந்த மாதவன், "உன் வீட்டிற்குள்ளே என் மனைவி சென்றதை நான் பார்த்து விட்டுதான் வந்தேன்" எனக் கூறியதும், அதிர்ச்சியடைந்த சரவணன் "நான் கவனிக்கவில்லையே" எனக் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுள்ளார்.
இச்சம்பவத்தை மாதவன் போலீசாரிடம் கூற, தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, சாமுண்டீஸ்வரியின் கார் இரவு நேரத்தில் காளாப்பூர் சாலையில் சென்று திரும்பியது உள்ளிட்ட ஆதாரங்கள் அடிப்படையில் சாமுண்டீஸ்வரி மற்றும் அவரது கள்ளக்காதலன் சரவணன் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் "எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை" என முதலில் கூறி வந்துள்ளனர். இந்நிலையில் சாமுண்டீஸ்வரி காரில் உள்ள கியர் பாக்ஸில் பூச்சியம்மாள் அணிந்திருந்த 10 1/2 பவுன் நகைகள் இருந்ததை உறுதி செய்த போலீசார், "நகை எப்படி காருக்குள் வந்தது?" என கேட்ட போது இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
சூரக்குடியை சேர்ந்த சாமுண்டீஸ்வரியின் கணவர் கடந்த ஒராண்டுக்கு முன் இறந்துள்ளார். இந்நிலையில் சாமுண்டீஸ்வரி இரண்டு பிள்ளைகளுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். கணவர் இறந்த நிலையில் சென்னையில் அவருக்கு சரவணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது திருவிழா உள்ளிட்ட விசேசங்களுக்காக சூரக்குடிக்கு சாமுண்டீஸ்வரியுடன் சரவணன் வந்து சென்றபோது பூச்சியம்மாள் எப்போதும் கை,காது, கழுத்தில் நகையுடன் இருப்பதை நோட்டமிட்டுள்ளார். இந்நிலையில் சாமுண்டீஸ்வரி உறவினருக்கு குழந்தை பிறந்துள்ளதை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து சாமுண்டீஸ்வரி சரவணன் இருவரும் வந்துள்ளனர்.
அப்போது தனக்கு கடன் பிரச்சனை இருப்பதாக கூறிய சரவணன், அதற்கு தீர்வு காண பூச்சியம்மாளின் நகைகளை திருட முயற்சி செய்யலாம் என சாமுண்டீஸ்வரிடம் கூறியுள்ளார். முதலில் தயங்கிய சாமுண்டீஸ்வரி சரவணன் பேச்சுக்கு மயங்கி பூச்சியம்மாளை தீர்த்து கட்டி நகையை கொள்ளையடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் சாமுண்டீஸ்வரியின் அழைப்பை ஏற்று வீட்டிற்கு வந்த மூதாட்டி பூச்சியம்மாளை போர்வையால் போர்த்தி மூச்சு திணறடித்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த 10.1/2 பவன் நகைகளை திருடிக் கொண்டு, நகைகளை கார் கியர் பாக்சில் வைத்துவிட்டு மூதாட்டியை சாக்கு பையில் மூட்டையாக கட்டி வைத்து நள்ளிரவு வரை காத்திருந்துள்ளனர். பின்பு நள்ளிரவு காரை எடுத்துக் கொண்டு மூதாட்டியை கால்வாயில் தூக்கி எறிந்து விட்டு, மூதாட்டியின் செல்போனை ஊரணிக்குள்ளும், செருப்பை வயல் பகுதியிலும் வீசிவிட்டு, கொலைக்கு பயன்படுத்திய போர்வை, சாக்கு பைகள் அனைத்தையும் தனித்தனியாக ஒவ்வொரு பகுதிகளில் வீசி விட்டு காரில் ஏறி காளாப்பூர் வரை சென்று விட்டு மீண்டும் ஊருக்குள் திரும்பி வந்துள்ளனர். அதன்பின்னர் பூச்சியம்மாளை காணவில்லை என அனைவரும் தேடியபோது இவர்களும் உடன் வந்து தேடியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் போலீசார் "மூதாட்டியின் மீது சீனியை (sugar) ஏன் தூவி சென்றீர்கள்?" என விசாரணையில் கேட்டபோது "எறும்புகள் மொய்த்து தடயங்களை அழிக்கும் நோக்கில், தடயங்களை அளிப்பதற்காக ஒரு திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொண்டேன்". இந்த புது யுக்தியை பார்த்து பூச்சியம்மாளை கொலை செய்து அவரது உடம்பின் மீது சீனியை தூவி விட்டு சென்று விட்டதாக சரவணன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், சிசிடிவியில் நள்ளிரவு சாமுண்டீஸ்வரி கார் சென்று திரும்பிய காட்சிகளை வைத்தும், மோப்ப நாய் லைலா பூச்சியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து ஓடிச்சென்று சாமுண்டீஸ்வரி வீட்டில் படுத்துக்கொண்டதை வைத்தும், தடயவியல் நிபுணர்களின் ஆய்வுகள் மற்றும் கொலையாளிகளை பிடிக்கும் தேடுதல் வேட்டையில் கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததுமே கொலையாளிகளை கொலை நடந்த சம்பவம் தெரிந்த 5 மணி நேரத்தில் கைது செய்ய முடிந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.