"வீட்டுக்கு வர்றேன்டா... உன் பொண்டாட்டிய கொடு" - ரூ.750-க்காக நடந்த பயங்கரம்! லீக் ஆன பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியரின் ஆடியோ!

வாடிக்கையாளரின் மனைவியையும் தாயையும் மிகக் கேவலமாகப் பேசிய ஆடியோ வெளியாகி...
"வீட்டுக்கு வர்றேன்டா... உன் பொண்டாட்டிய கொடு" - ரூ.750-க்காக நடந்த பயங்கரம்! லீக் ஆன பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியரின் ஆடியோ!
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் கந்துவட்டி மற்றும் நுண்நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் எல்லை மீறிக்கொண்டே செல்கிறது. சாமானிய மக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்காகச் சிறு தொகையை கடனாகப் பெற்றுவிட்டு, அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறுவதும், அதற்காகக் கடன் வசூல் செய்யும் நபர்கள் அவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் நடந்தேறியுள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வெறும் 750 ரூபாய் பாக்கித் தொகையைச் செலுத்துவதற்குச் சிறிது காலதாமதமானதற்காக, பிரபல பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரின் மனைவியையும் தாயையும் மிகக் கேவலமாகப் பேசிய ஆடியோ வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் அருகே உள்ள ராஜபதி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையா ராமகிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருவதுடன், தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தேவைக்காக பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்தக் கடனுக்காக மாதந்தோறும் 4,750 ரூபாய் தவணைத் தொகையை மிகச் சரியாகச் செலுத்தி வந்துள்ளார். கடந்த 10 மாதங்களாக எந்தவிதப் பாக்கியும் இன்றித் தனது கடனை நேர்மையாகச் செலுத்தி வந்த கண்ணையா ராமகிருஷ்ணனுக்கு, இந்த மாதம் மட்டும் சிறிது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தவணைத் தொகையான 4,750 ரூபாயில், 4,000 ரூபாயை ஒரு மொபைல் கடை மூலமாக உடனடியாகச் செலுத்தியுள்ளார். மீதமுள்ள வெறும் 750 ரூபாயை மட்டும் அன்று இரவு 10 மணிக்குள் கட்டிவிடுவதாக உறுதியளித்துள்ளார்.

ஆனால், அந்தச் சொற்பத் தொகையான 750 ரூபாய்க்காக, பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்ற வசூல் முகவர் நடந்துகொண்ட விதம் மனிதநேயமற்றது. இரவு நேரம் என்றும் பாராமல் கண்ணையா ராமகிருஷ்ணனுக்குத் தொடர்ந்து போன் செய்த அந்த நபர், மிக மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார். "இன்னைக்கு நைட்டுக்குள்ள பணம் வரலன்னா, நாளைக்குக் காலையில உன் வீட்டுக்கு வருவேன். உன் பொண்டாட்டியையும், உன் அம்மாவையும் கூட்டிட்டுப் போவேன்" என்று மிகக் கேவலமாகப் பேசியுள்ளார். "உன் பொண்டாட்டி என்ன எவனையும் கூட்டிட்டுப் போக மாட்டாளா?" என்று வாய் கூசும் அளவுக்கு ஆபாசமாகப் பேசிய அந்த ஆடியோ தற்போது வெளியாகிப் பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. ஒரு பெண் என்றும் பாராமல், வாடிக்கையாளரின் குடும்பத்துப் பெண்களை இவ்வளவு இழிவாகப் பேசியது கடும் கண்டனத்திற்குரியது.

இந்தத் தரக்குறைவான பேச்சைக் கேட்ட கண்ணையா ராமகிருஷ்ணனின் மனைவி, அவமானத்தில் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. "இப்படிப்பட்ட கேவலமான பேச்சைக் கேட்ட பிறகு நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?" என்று கதறிய அவரது மனைவி, வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்து போன கண்ணையா ராமகிருஷ்ணன், மறுநாள் காலை சம்பந்தப்பட்ட பஜாஜ் ஃபைனான்ஸ் அலுவலகத்திற்குச் சென்று முறையிட்டுள்ளார். ஆனால், அங்கிருந்த மேலாளர்கள் வைகுண்டம் மற்றும் வரதராஜன் ஆகியோர் இவருக்கு முறையான பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தியுள்ளனர். இதனால் விரக்தியின் உச்சிக்கே சென்ற அவர், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றித் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அந்த இடத்தையே போர்க்களமாக்கியது. அங்கிருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்க்க முடிந்தது.

கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்துகொண்டால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட மசோதாவைத் தமிழக அரசு கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபையில் நிறைவேற்றியது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த இந்த மசோதாவின்படி, கடன் வாங்கியவர்களின் குடும்பத்தாரை மிரட்டுவதோ, அவமானப்படுத்துவதோ, அல்லது தற்கொலைக்குத் தூண்டும் வகையில் பேசுவதோ கடுமையான குற்றமாகும். ஆனால், இந்தச் சட்டங்கள் எதையும் மதிப்பதாகத் தெரியாத இந்தத் தனியார் நிறுவனங்கள், தொடர்ந்து அடியாட்களையும், ரவுடிகளையும் வைத்துப் பொதுமக்களை மிரட்டி வருவது வேதனையான விஷயம். 750 ரூபாய்க்காக ஒரு குடும்பத்தின் மானத்தையே வாங்கும் அளவுக்குத் துணிந்த இத்தகைய நபர்கள் மீது காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது. நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்தும், போலீசார் மெத்தனமாகச் செயல்படுவதாகக் கண்ணையா ராமகிருஷ்ணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இனியாவது காவல்துறை விழித்துக்கொண்டு, இது போன்ற "வசூல் ரவுடிகள்" மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com