“12 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 30 வயது வாலிபர்” - ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது அம்பலம்… காதல் என்ற பெயரில் செய்த சம்பவம்!

அதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே தொடர்ந்து சிறுமியை சந்தித்து பேசி ஆசை வார்த்தைகள் கூறி...
“12 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 30 வயது வாலிபர்” - ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது அம்பலம்… காதல் என்ற பெயரில் செய்த சம்பவம்!
Published on
Updated on
2 min read

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள ஒரு பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் 12 வயது ஆதிவாசி சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி தினந்தோறும் பள்ளிக்கு நடந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் வழியில் நான்சச் பகுதிக்கு அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த 30 வயதுடைய லிங்கன் என்ற வாலிபர் சிறுமியை பின் தொடர்ந்து அவருடன் பேசி பழகி வந்திருக்கிறார். இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் வாலிபர் சிறுமியிடம் காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி இருக்கிறார்.

இதனை நம்பிய சிறுமியும் வாலிபருடன் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுமியையும் வாலிபரையும் கண்டித்திருக்கின்றனர். எனவே லிங்கன் சிறுமியிடம் “உங்கள் வீட்டில் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் நம்மை பிரித்து விடுவார்கள்” என கூறி சிறுமியை வீட்டில் யாருக்கும் தெரியாமல் தன்னுடன் வந்து விடுமாறு கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே தொடர்ந்து சிறுமியை சந்தித்து பேசி ஆசை வார்த்தைகள் கூறி தன்னுடன் வர சம்மதிக்க வைத்ததாக சொல்லப்படுகிறது. ​​

அதன்படி சிறுமி ​கடந்த (ஜன 28) ஆம் தேதி புதன்கிழமை பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது அவரது தந்தை வேலைக்கு சென்ற நிலையில் தாய் பர்லியார் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றிருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாத இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி சிறுமி லிங்கனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். ​பின்னர் ரேஷன் கடையில் இருந்து வீட்டிற்கு சென்று சிறுமியின் தாய் வீட்டில் மகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்து உறவினர்கள் உதவியுடன் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்திருக்கிறார்.

எங்கு தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில் இது குறித்து கொலக்கொம்பை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமி குறித்து விசாரணை மேற்கொண்ட போது சிறுமி லிங்கனுடன் சென்றுள்ளது தெரியவந்தது. எனவே விசாரணை தீவிரப்படுத்தி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசாருக்குக் கிடைத்த தகவலின்படி, இருவரும் கூடலூர் பகுதியில் தனி வீடு எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது.

எனவே விரைந்து கூடலூர் பகுதிக்கு சென்ற போலீசார் சிறுமியை பாதுகாப்பாக மீட்டு லிங்கனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமிக்குத் தகுந்த ஆலோசனைகள் மற்றும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. ​பள்ளியில் படிக்கும் சிறுமியை ஆசை வலையில் சிக்க வைத்து, அழைத்து சென்று தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com