

உத்தரப்பிரதேசத்தில் தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த ஒன்பது மாதக் குழந்தையை 12 வயது சிறுவன் ஒருவன் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 12 வயது சிறுவன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட அந்தச் சிறுவன், தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்துவதற்கு முன்பு, வெள்ளிக்கிழமை இரவு மது அருந்தியதாகவும், பின்னர் தனது கைப்பேசியில் ஆபாச படங்களை பார்த்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளது. அவரது கைப்பேசியில் 50-க்கும் மேற்பட்ட ஆபாசக் காணொளிகளும், 100-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களுக்கான தேடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து குலரிஹா காவல் நிலையத்தில் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் படி, அதிகாலை 2 மணியளவில் குழந்தை காணாமல் போனதை அடுத்து, அந்த கிராமம் மற்றும் அருகில் உள்ள வயல்வெளிகளில் தீவிரமாக தேடி வந்தனர். சனிக்கிழமை காலை, வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், ஒரு வயலில் உள்ள தகரக் கொட்டகைக்கு அருகே, கடுமையான வலியுடனும் இரத்தப்போக்குடன் அந்தக் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. குடும்பத்தினர் அந்த குழந்தையை அவசரமாக ஒரு அருகில் சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, அவர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டதாகவும், பச்சிளம் குழந்தை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையின் போது, குழந்தையின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய போலீசார், மூன்று நாட்களுக்கு முன்பு சண்டிகரில் இருந்து வந்ததாக கூறப்படும் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் 12 வயது ஆண் உறவினர் மீது சந்தேகம் கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை காவலில் எடுக்கப்பட்ட அந்தச் சிறுவன், ஆரம்பத்தில் முரண்பட்ட வாக்குமூலங்களை அளித்ததாகவும், ஆனால் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறை தெரிவித்தனர். குழந்தை சிகிச்சை பெற்று வருவதாகவும், இவ்வழக்கில் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நகர காவல் கண்காணிப்பாளர் நிமேஷ் பாட்டீல் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.