“காவல் நிலையத்தில் தீக்குளித்த பெண்” - பற்றி எரிந்த உடலை பார்த்து அலறிய காவலர்கள்.. விசாரணையில் நடந்தது என்ன?

இதனால் சம்பவத்தன்று கண்மணி அவரது கணவர் லட்சாதிபதியுடன் சென்று அருளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்...
Panruti Woman Self Immolation Attempt
Panruti Woman Self Immolation Attempt
Published on: 
Updated on: 
2 min read

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, கணவரை விடுவிக்கக் கோரி காவல் நிலையத்திற்குச் சென்ற பெண் ஒருவர், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், முதலில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையே, பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒறையூர் ஊராட்சியில், 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் தொடர்பாக ஊராட்சி செயலாளர் அருள் என்பவருக்கும், பணித்தளப் பொறுப்பாளர் கண்மணி என்பவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மொத்தம் 4 குழுக்கள் உள்ள நிலையில் கடந்த நான்கு மாதங்களாக கண்மணி பொறுப்பாளராக உள்ள குழுவிற்கு மட்டும் வேலை இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று கண்மணி அவரது கணவர் லட்சாதிபதியுடன் சென்று அருளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஊராட்சி செயலாளர் அருள் அளித்த புகாரின் பேரில் கண்மணியின் கணவர் லட்சாதிபதியை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த கண்மணி தனது கணவரை விடுவிக்கக் கோரி புதுப்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரிடம் முறையிட்டுள்ளார். அப்போது, கண்மணியையும் கைது செய்துவிடுவதாக போலீசார் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கண்மணி, பெட்ரோல் வாங்கி வந்து தனது உடலில் ஊற்றித் தீ வைத்துக்கொண்டதாகத் தெரிகிறது. பின்னர் பலத்த தீக்காயங்களுடன் காவல் நிலையத்திற்குள் விழுந்துள்ளார். காவல் நிலையத்திற்குள் பெண் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையே, கண்மணி தீக்குளித்த சம்பவத்தைக் கண்டித்து அவரது உறவினர்கள் புதுப்பேட்டை காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, காவல் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டார்.

மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் புதுப்பேட்டை காவல் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல் நிலையத்திற்குள்ளேயே பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக புதுப்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.