Part-time வேலைக்குப் பின்னால் பெரும் மோசடி! மாணவர்களின் வங்கிக் கணக்குகளை குறிவைக்கும் மர்ம கும்பல்!

சிலர் வேலை வழங்குவதாகக் கூறி வங்கிக் கணக்கு தொடங்கவும், ஏடிஎம் அட்டை, வங்கிப் புத்தகம், ஓடிபி போன்றவற்றைப் பெறவும் முயற்சிக்கின்றனர்...
Part-time job scam targeting students
Part-time job scam targeting students
Published on: 
Updated on: 
2 min read

கல்லூரிப் படிப்புடன் பகுதி நேர வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது இன்றைய மாணவர்கள் பலரின் விருப்பமாக உள்ளது. குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும், தங்களுடைய சொந்தச் செலவுகளைச் சமாளிக்கவும் பலர் ஆன்லைன் வேலைவாய்ப்புகளைத் தேடுகின்றனர். ஆனால், மாணவர்களின் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் புதிய வகையான மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில், சில மாணவர்கள் தங்களுக்கே தெரியாமல் சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக, மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகுதி நேர வேலை வழங்குவதாகக் கூறி ஐந்து கல்லூரி மாணவர்களிடம் ஆதார், பான் அட்டை, புகைப்படம் மற்றும் கைரேகை விவரங்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், அவர்களுக்கு வேலைவாய்ப்போ சம்பளமோ வழங்கப்படவில்லை. மாறாக, அவர்களுடைய ஆவணங்களைப் பயன்படுத்தி 11 வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதாகப் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கணக்குகள் மூலம் வெறும் 15 நாட்களில் சுமார் 9 கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே மோசடி தொடர்பாக 75 வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டதாகவும், அவற்றின் வழியாக சுமார் 50 கோடி ரூபாய் சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் 'மியூல் அக்கவுண்ட்' (Mule Account). அதாவது, மற்றவர்களிடமிருந்து சட்டவிரோதமாகப் பெறப்படும் பணத்தைத் தங்களுடைய வங்கிக் கணக்கில் பெற்றுக்கொண்டு, பின்னர் வேறு கணக்குகளுக்கு மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கணக்குகளே மியூல் அக்கவுண்ட்கள் எனப்படுகின்றன. இதற்காகக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிறிய தொகை கமிஷனாக வழங்கப்படலாம். சில நேரங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கே அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால், இத்தகைய கணக்குகள் மூலம் பண மோசடி நடைபெறும்போது வங்கிக் கணக்கு முடக்கப்படுவதுடன், விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடலாம்.

சமூக வலைதளங்களில் தற்போது வீட்டிலிருந்தே வேலை செய்யலாம், தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம், வீடியோக்களுக்கு லைக் கொடுத்தால் பணம் கிடைக்கும் போன்ற விளம்பரங்கள் அதிகரித்துள்ளன. ஆரம்பத்தில் சிறிய தொகையை வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்தும் மோசடியாளர்கள், பின்னர் பதிவு கட்டணம், முன்பணம் அல்லது முதலீடு செய்யுமாறு கேட்கின்றனர். சிலர் வேலை வழங்குவதாகக் கூறி வங்கிக் கணக்கு தொடங்கவும், ஏடிஎம் அட்டை, வங்கிப் புத்தகம், ஓடிபி போன்றவற்றைப் பெறவும் முயற்சிக்கின்றனர்.

மாணவர்கள் வேலைவாய்ப்பைத் தேர்ந்தெடுக்கும் முன்பு அந்த நிறுவனம் உண்மையானதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். தெரியாத நபர்களிடம் ஆதார், பான் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் கைரேகை போன்றவற்றைப் பகிரக்கூடாது. குறிப்பாக, தங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் பெறவோ, மற்றவர்களுக்குப் பணம் அனுப்பவோ அனுமதிக்கக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் ஏடிஎம் அட்டை, ரகசிய எண், ஓடிபி ஆகியவற்றை மற்றவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது.

இதில் பெற்றோர்களின் பங்கும் மிகவும் முக்கியமானது. பிள்ளைகள் ஆன்லைனில் தேடும் வேலைவாய்ப்புகள், தொடர்புகொள்ளும் நபர்கள் மற்றும் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் குறித்து அவர்களுடன் திறந்த மனதுடன் பேச வேண்டும். சந்தேகத்திற்குரிய வேலைவாய்ப்புகள் வந்தால் பெற்றோரிடம் தெரிவிக்க ஊக்கப்படுத்த வேண்டும். ஏற்கெனவே இதுபோன்ற மோசடியில் சிக்கியிருந்தால் உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு கணக்கைப் பாதுகாக்க வேண்டும். பண மோசடி நடைபெற்றிருந்தால் 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம்.

கல்லூரிப் பருவத்தில் பணம் சம்பாதிப்பது தவறல்ல. ஆனால், குறுகிய காலத்தில் அதிக வருமானம் கிடைக்கும் என்ற ஆசையில் நம்முடைய அடையாளத்தையும் வங்கிக் கணக்கையும் ஆபத்தில் விடக்கூடாது. ஒரு சிறிய கவனக்குறைவு கூட எதிர்காலத்தில் பெரிய சட்ட மற்றும் பொருளாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தலாம். எனவே, மாணவர்களும் பெற்றோர்களும் ஆன்லைன் வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியமாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.