"புதிய கடைகளை குறிவைத்து நடக்கும் வசூல் வேட்டை" - 3 மணி நேரம் மிரட்டல்.. GPay-ல் ரூ.50,000! புதிதாகி திறந்த ஜிம்மில் நடந்தது என்ன?

உரிமையாளரை மிரட்டி ரூ. 50 ஆயிரம் பணம் பறித்த 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மீது திருவள்ளூர் தாலுகா போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு
Tiruvallur gym owner complaint
Tiruvallur gym owner complaint
Published on: 
Updated on: 
2 min read

திருவள்ளூர் மாவட்டம் அருகே புதிதாக உடற்பயிற்சி கூடம் திறந்த உரிமையாளரை மிரட்டி ரூ. 50 ஆயிரம் பணம் பறித்த 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மீது திருவள்ளூர் தாலுகா போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும் சுற்றுவட்டார மக்கள் தெரிவித்துவருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் கடந்த 19-ம் தேதி அன்று 'பியூஷன் 24 பிட்னஸ்' என்ற புதிய உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த உடற்பயிற்சி கூட திறப்பு விழாவிற்கு அர்ஜுனா விருது பெற்ற 'பாடி பில்டிங் வீரர்' பாஸ்கரன் உள்ளிட்ட உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் பலர் வருகை தந்து சிறப்பித்துள்ளனர். அந்த சமயத்தில், உடற்பயிற்சி கூடத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கடைக்குள் புகுந்துள்ளனர். அதுமட்டுமின்றி, "ரூ. 50 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே இங்கிருந்து செல்வோம்" என கூறி அடாவடி செய்துள்ளனர்.

Tiruvallur gym owner complaint
Tiruvallur gym owner complaint

ஆனால், உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர், அவர்கள் கேட்ட பணத்தை அளிக்க முதலில் மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி, உரிமையாளர் மற்றும் விழாவிற்கு வந்திருந்த நபர்கள் உட்பட அனைவரும் அங்கு கூடியிருந்த திருநங்கைகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், திருநங்கைகளை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் செல்லாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

மேலும், திருநங்கைகள் மூன்று மணி நேரமாக உடற்பயிற்சி கூட உரிமையாளரை மிரட்டி, அவரை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து, ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணத்தையும் 'ஜிபே' (Gpay) மூலமாக பெற்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடற்பயிற்சி கூட உரிமையாளர், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மேலும், பிரச்சனையில் ஈடுபட்ட திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடமிருந்து பணத்தை மீட்டு தரக்கோரி அவர் புகாரும் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் தாலுகா போலீசார் பிரிவு -296 (b) அச்சுறுத்தி பணம் பறித்தல், 308 (2) ஆபாசமாக பேசுதல், 351(2) மிரட்டி பணம் பறித்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் புதிதாக திறக்கப்படும் கடைகளுக்கு குழுவாக சில திருநங்கைகள் சென்று அத்துமீறி நுழைந்து உரிமையாளர்களிடம் மிரட்டி பணம் வசூலித்து வருவதும் தொடர்ச்சியாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பாதிக்கப்படும் கடை உரிமையாளர்கள் காவல் நிலையம் சென்று அவர்கள் மீது புகார் அளிக்க முன் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பணம் வசூலிப்பதற்காக 'கும்மிடிப்பூண்டி சிப்காட்' பகுதியில் உள்ள தொழிற்சாலைக்குள் அத்துமீறி குழுவாக சில திருநங்கைகள் நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com