உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்டம் ஜித்னியா கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான மோகன்தேய், இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கிறார். பின்னர் மகள் மீனா குமாரிக்கு பக்கத்துக்கு ஊரை சேர்ந்த மகேந்திர பாலுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். எனவே மோகன்தேய் தனது மகன் சுரேஷ் உடன் தனியாக வீட்டில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி மீனா குமாரி அவரது தாய் வீட்டிற்கு சென்று நான்கைந்து நாட்கள் தங்கி வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அப்படி மீனா குமாரி செல்லவில்லை என்றால் தாய் அவருக்கு போன் செய்து அழைப்பதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்.
மனைவி அடிக்கடி தாய் வீட்டிற்கு செல்வதை விரும்பாத மகேந்திர பாலு, மீனா குமாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகேந்திர பாலு அவரது மாமியாரை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார். அதன் படி கடந்த கடந்த ஜூலை 31ஆம் தேதி இரவு மகேந்திர பாலு தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் மோகன் தேய் மட்டும் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மகேந்திர பால், மோகன்தேயை அடித்து கொலை செய்துவிட்டு, அவரது உடலை அருகிலிருந்த தொழுவத்தில் வைத்து தீ வைத்து எரித்ததாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, மோகன்தேயின் மகன் சுரேஷ் குமார் வீட்டிற்கு திரும்பியபோது, தனது தாயை காணவில்லை என தேடியுள்ளார். பல நாட்களாக அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காத நிலையில், வீட்டின் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சாம்பல் கிடப்பதை கவனித்துள்ளார்.
அந்த சாம்பலை தோண்டிப் பார்த்தபோது கருகிய மனித எலும்புத் துண்டுகளும் வளையல்களும் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ், தனது தாயை கொலை செய்து எரித்திருக்கலாம் என சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அமரியா காவல்துறையினர், அங்கு கிடந்த கருகிய எலும்புத் துண்டுகள், வளையல்கள் உள்ளிட்ட தடயங்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மோகன்தேயின் உடல் முழுமையாக எரிக்கப்பட்டிருப்பதால், மீட்கப்பட்ட எலும்புகள் அவருடையதுதானா என்பதை உறுதி செய்வதற்காக தடயவியல் பரிசோதனை மற்றும் தேவையான பட்சத்தில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சுரேஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை மற்றும் தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அமரியா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மகேந்திர பாலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாமியாரை கொலை செய்து உடலை எரித்ததாக மருமகன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள இந்த சம்பவம், ஜித்னியா கிராமத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.