``காக்கிச் சட்டைக்கே பாதுகாப்பில்லை", "CM விஜய் வாய் திறக்கப்போவதில்லை..." ஒரே நாளில் 11 கொலைகள்.. எதிர்க்கட்சிகள் கண்டனம்

"இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும், திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதலமைச்சர் விஜய் வாய் திறக்கப்போவதில்லை. " - கனிமொழி
 "Not Even Police Uniform is Safe": 11 Murders in a Single Day, opposition blams CM Vijay
``காக்கிச் சட்டைக்கே பாதுகாப்பில்லை", "CM விஜய் வாய் திறக்கப்போவதில்லை..." ஒரே நாளில் 11 கொலைகள்.. எதிர்க்கட்சிகள் கண்டனம்
Published on: 
Updated on: 
2 min read

தமிழ் நாட்டில் நேற்றைய தினம் தீபாவளி கொண்டாட்டத்துக்கு நடுவே 11 கொலைகள் நடந்துள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகபட்சமாக திருச்சியில் 3 கொலைகள் நடந்துள்ளன. தேனியில் போதை கும்பலை தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டுள்ளார். சிவகங்கையில் 2 கொலைகள் நடந்துள்ளன. சென்னை, கடலூர், திண்டுக்கல் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 1 கொலை நடந்துள்ளன.

இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சட்டம் ஒழுங்கு குறைபாடுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி வருகின்றன.

திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, "நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 11 கொலைகள் நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் ஓர் இளம்பெண், சமயபுரத்தில் இரு சிறார்கள், திருச்சியில் ஓர் ஐடி ஊழியர் எனப் பல மாவட்டங்களில் உயிர்கள் பறிபோயுள்ளன.

ஒருபுறம் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்க, இந்த மனிதாபிமானமற்ற ஆட்சியில் மறுபுறம் உயிர்களை இழந்த குடும்பங்களில் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது

இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும், திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதலமைச்சர் விஜய் வாய் திறக்கப்போவதில்லை.

முதலமைச்சர் அவர்களே, மக்கள் எல்லாவற்றையும் எப்போதும் சகித்துக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்!" எனக் கண்டித்துள்ளார்.

மறுபக்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "ஒரே நாளில் 11 கொலைகள்- தீபாவளி நாளான்று பட்டாசு சத்தத்திற்கு இணையாக ​தேனி, கடலூர், திருச்சி, சென்னை, சிவகங்கை, திருவள்ளூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சத்தமும் கேட்டிருக்கிறது தமிழ்நாட்டில்!

​தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து, மாநிலம் முழுவதும் ரத்தக் களறியாக மாறியிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது.

​"ரோட்டில் நின்றால் கொலை... தட்டிக்கேட்டால் படுகொலை!" என்னும் அளவிற்கு ரவுடிகளும் குற்றவாளிகளும் தெருக்களில் அச்சமின்றி நகர்வலம் வரும் அளவிற்கு நாட்டின் சட்டம் ஒழுங்கைத் தள்ளியிருக்கிறது தவெக அரசு.

இதில் உச்சகட்ட கொடுமையாக, தேனியில் பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களையே ரவுடிகள் அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

​"காக்கிச் சட்டைக்கே இங்கே பாதுகாப்பில்லை என்றால், சாமானிய மக்களுக்கு எங்கே இருக்கும் பாதுகாப்பு?"

அஇஅதிமுக ஆட்சியில் கம்பீரமாக நிமிர்ந்து நின்ற தமிழ்நாடு காவல்துறை, இன்றைக்கு ஆளத் தெரியாத ஆச்சரியக்குறி தவெக அரசால் கலகலத்துப் போய் நிற்பது மிகுந்த வேதனைக்குரியது.

​அரசியல் என்பது சினிமா செட் அல்ல; முதலமைச்சர் நாற்காலி என்பது 'பஞ்ச் டயலாக்' பேசுவதற்கான மேடையும் அல்ல என்பதை இந்த 'ரீல்' முதல்வர் விஜய் அவர்கள் இப்போது புரிந்து கொள்வார்?

படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களின் குடும்பத்திற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 40 லட்ச ரூபாய் நிதி உதவி என்பது போதுமானது அல்ல.

அஇஅதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்கட்சியாக இருந்தபோதும் சரி, Line Of Duty-ன் போது உயிரிழக்கும் காவலர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். இந்த அரசும், கடந்த 14.10.2026 அன்று வெளியிட்டுள்ள அரசாணையில், பணியின்போது துணிச்சலுடன் உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என கூறியுள்ளது.

தான் போட்ட அரசாணை கூட இந்த ஆச்சரியக்குறி அரசுக்கு நியாபகம் இல்லை என்பதுதான் இங்கு ஆச்சரியமாய் இருக்கிறது.

அந்த வகையில், திரு. செந்தில்குமார் குடும்பத்தினருக்கும் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என இந்த அரசைக் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

ஒரே நாளில் 11 கொடூரக் கொலைகளை செய்து தமிழகத்தை பதற வைத்த அனைத்துக் குற்றவாளிகள் மீதும் மிகக்கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். " எனக் கண்டித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.

Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.

இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.

கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.

ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?

தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை." எனக் கண்டித்து பதிவிட்டுள்ளார்.

 "Not Even Police Uniform is Safe": 11 Murders in a Single Day, opposition blams CM Vijay
"கேமராக்களுக்கு ஆக்‌ஷன் செய்வதில் ஆர்வம்.. புத்தகங்களை சரிபார்க்க வேண்டாமா.. " - தவெக குறைகளை அடுக்கிய EPS!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.