“மருத்துவமனையில் ஏற்பட்ட கள்ளக்காதல்” - பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட காதலி.. சுடுகாட்டில் பதுங்கிய குற்றவாளி!

பிரகாஷின் மனைவி பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, பிரகாஷுக்கும் ராஜேஸ்வரிக்கும் பழக்கம்...
Ponneri Rajeshwari Petrol Attack
Ponneri Rajeshwari Petrol Attack
Published on
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராக பணியாற்றி வருபவர் 36 வயதுடைய ராஜேஸ்வரி. இவர் நேற்று(செப் 22) மாலை பணி முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் ராஜேஸ்வரியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால், அவர் அலறியபடி மீண்டும் மருத்துவமனைக்குள் ஓடிச் சென்றார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேஸ்வரி மீது தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய இரண்டு தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், மாதவரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், பொன்னேரி சுடுகாடு அருகே பிரகாஷ் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்யச் சென்றபோது, பிரகாஷ் பொன்னேரி உதவி ஆய்வாளர் தமிழரசனை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் உதவி ஆய்வாளர் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, பொன்னேரி காவல் ஆய்வாளர் சிவக்குமார் துப்பாக்கியால் பிரகாஷின் காலுக்கு கீழ் சுட்டதாகவும், பின்னர் அவரை போலீசார் பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரகாஷுக்கு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த உதவி ஆய்வாளர் தமிழரசனும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையின் படி, பிரகாஷின் மனைவி பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, பிரகாஷுக்கும் ராஜேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தொடர்ந்து பழகி வந்த இருவருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டதாகவும், பிரகாஷின் மனைவி உயிரிழந்த பின்னரும் இருவரும் தொடர்ந்து கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சமீப காலமாக ராஜேஸ்வரி பிரகாஷுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனை வாசலில் தற்காலிக பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றதும், பின்னர் போலீசாரை தாக்கியதாகக் கூறப்படும் நபர் துப்பாக்கிச் சூட்டில் பிடிபட்டதும் பொன்னேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com