“முகம் சிதைத்து கொல்லப்பட்ட வெல்டிங் தொழிலாளி” - நண்பர்கள் போல பேசி அழைத்து சென்ற வாலிபர்கள்.. பழிக்கு பழி தீர்த்த சம்பவம்!

அவர் போதையில் இருந்தபோது சரமாரியாக வெட்டித் தாக்கியதுடன், கத்தி மற்றும் பீர் பாட்டில்..
SUNIL AND murder spot
SUNIL AND murder spot
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதுடைய சுனில். வெல்டராக பணியாற்றி வந்த இவர், அருகிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய சுனிலிடம் அவரது குடும்பத்தினர் சம்பளப் பணம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு, "இன்னும் சம்பளம் வழங்கவில்லை" என்று கூறிய அவர், இரவு மீண்டும் வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பொன்னேரி அருகே ஆரணியாற்று பாலத்தின் கீழ் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடனும், முகம் மிகக் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையிலும் கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அக்கம் பக்கத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் குன்னமஞ்சேரியைச் சேர்ந்த சுனில் என்பது உறுதியானது. தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு சின்னக்காவனம் பகுதியில் நடைபெற்ற துக்க நிகழ்வின்போது ஏற்பட்ட தகராறில் தீபன் (24) என்பவரின் நண்பர்களை சுனில் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்க தீபனும், அவரது நண்பர்களும் நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்திருக்கின்றனர். அதன்படி சம்பவத்தன்று, முன்விரோதம் எதுவும் இல்லாதது போல் சுனிலிடம் நல்ல முறையில் பேசி, மது அருந்த அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் போதையில் இருந்தபோது சரமாரியாக வெட்டித் தாக்கியதுடன், கத்தி மற்றும் பீர் பாட்டில், கற்கள் ஆகியவற்றால் முகத்தை சிதைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் சிலரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வரும் நிலையில், முக்கிய குற்றவாளியான தீபன் மற்றும் அவரது நண்பர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை சுனிலின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும், கொலையில் தொடர்புடைய அனைவரையும் விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்விரோதத்தை காரணமாகக் கொண்டு நண்பர்கள் போல அழைத்துச் சென்று 27 வயது இளைஞரை முகம் சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் பொன்னேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com