“தோட்டத்திற்கு அழைத்து சென்று வெட்டி கொலை” - அடுத்தடுத்து இருவருக்கு விழுந்த அரிவாள் வெட்டு.. குதிரை தகராறில் பரிதாபம்!

ராமரின் குடும்பத்தினர் மற்றும் அதே சமூகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
ramar and ragu
ramar and ragu
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் அமைந்துள்ள பூம்பாறை கிராமத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த ரகு என்பவருக்கும், ராமர் (26), பிரசாந்த் (24) ஆகியோருக்கும் இடையே, ராமரின் குதிரைகள் ரகுவின் விவசாய நிலத்தில் அடிக்கடி மேய்ந்து வந்ததாகக் கூறி கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று பூம்பாறை அருகே உள்ள தோட்டப் பகுதிக்கு ராமர் மற்றும் பிரசாந்தை ரகு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ரகு அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரசாந்த்தை அக்கம் பக்கத்தினர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கொலை செய்யப்பட்ட ராமரும், கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளான ரகுவும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சம்பவத்தைத் தொடர்ந்து பூம்பாறை மற்றும் சுற்றுவட்டார மேல்மலை கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில இடங்களில் இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்துக்குப் பிறகு ரகு நேற்று இரவு காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கொலைச் சம்பவத்தில் ரகு மட்டுமல்லாமல் அவரது நண்பர்கள் சிலரும் தொடர்புடையவர்கள் என்றும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் உயிரிழந்த ராமரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, பூம்பாறையில் இருந்து மன்னவனூர் உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையில், ராமரின் குடும்பத்தினர் மற்றும் அதே சமூகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலை தொடங்கிய இந்தப் போராட்டம் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.

"ரகுவுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், எங்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும், இந்த வழக்கில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இருப்பினும், காவல்துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய உறவினர்கள், பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதனால் பூம்பாறை மற்றும் மேல்மலை கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com