

தஞ்சை அரசு இராஜா மிராசுதார் மருத்துவமனை மகப்பேறு வார்டில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றி திரிந்த கர்ப்பிணியை பிடித்து சோதித்த போது வயிற்றில் துணி கட்டிக் கொண்டு கர்ப்பிணி போல் நாடகமாடியது தெரிந்தது. குழந்தை திருட வந்த பெண் என கருதி அவரை பிடித்துக் கொடுத்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக குற்றம் சாட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மருத்துவமனையில் பரபரப்பான சூழல் உருவானது.
தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனையில் தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாமல் அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி ஆகிய அண்டை மாவட்டங்களில் இருந்து பிரசவத்திற்காக கர்ப்பிணிகள் வருகின்றனர். இந்த நிலையில் 20ம் தேதி இரவு மகப்பேறு வார்டில் சந்தேகத்திற்கு உரிய முறையில் சுற்றி வந்த கர்ப்பிணி பெண்ணை, மருத்துவமனையில் தங்கி இருந்த நோயாளிகள் உறவினர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் பரிசோதித்த போது வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு கர்ப்பிணி போல் சுற்றி வந்தது தெரியவந்தது.
இவர் கர்ப்பிணி போல் நாடகமாடி குழந்தையை கடத்த வந்த பெண் என கருதி அவரையும் அவருடன் வந்த இரண்டு பெண்களையும் பிடித்து மருத்துவமனை பாதுகாவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் கர்ப்பிணி போல் நாடகமாடிய பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண் மயிலாடுதுறை சேர்ந்த ஆர்த்தி என்பது தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாத காரணத்தால் வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு கர்ப்பிணி போல் கணவரின் குடும்பத்தினரை ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்