

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவரது மனைவி தேன்மொழி (35). 9 மாத கர்ப்பிணியான இருக்கும் தேன்மொழி, தன் கணவருடன் அரக்கோணம் சாலையில் ‘வெள்ளை கேட்’ அருகே இயங்கி வரும் மரக்கடை உரிமையாளர் ஆறுமுகம் என்பவரிடம் கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். அங்கேயே தங்கி மரம் வெட்டும் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுடன் முத்து - காவியா என்ற மற்றொரு தம்பதியும் இங்கு வேலை செய்து வருகின்றனர்.
வேலைக்காக மரக்கடை உரிமையாளர் ஆறுமுகத்திடம், ஆனந்தன்- தேன்மொழி தம்பதியினர் ரூ. 20,000 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அலறியடித்த இவர்கள், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்குமாறு ஆறுமுகத்திடம் கெஞ்சியுள்ளனர். ஆனால், "வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் மரம் வெட்டும் இடத்தில் இருந்து செல்லக் கூடாது" எனக் கூறி, அவர்களை மருத்துவமனைக்கு செல்லவிடாமல் ஆறுமுகம் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
நிறைமாத கர்ப்பிணிக்கு மருத்துவ உதவி கிடைக்காததால், தங்கியிருந்த கூடாரத்திலேயே தேன்மொழிக்கு நார்மல் டெலிவரி முறையில் பிரசவம் ஆகத் தொடங்கியுள்ளது. அப்போது, குழந்தையின் உடல் பாதி வெளியே வந்த நிலையில், தீவிர வலி மற்றும் இரத்தப்போக்கால் துடித்த தேன்மொழியும், அவரது பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று மாலை 4.00 மணியளவில் அங்கு வந்த உரிமையாளர் ஆறுமுகம், இந்தச் சம்பவத்தை “வெளியே யாருக்கும் சொல்லக்கூடாது” என்றும், பிரசவம் நடந்ததை மறைக்க வேண்டும் என்றும் கூறி, படிப்பறிவில்லாத அந்த இருளர் குடும்பத்தினரிடம் வெறும் ரூ. 2,000 பணத்தைக் கொடுத்து, இறந்த உடலோடு சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்புக்கு அனுப்பி வைத்துள்ளார். பயந்துபோன இருளர் மக்கள், தேன்மொழி மற்றும் அரைகுறையாக பிறந்திருந்த பச்சிளம் குழந்தையின் உடலோடு சடலத்தைக் இருளர் குடியிருப்புக்குக் கொண்டு வந்தனர். இக்கொடூர சம்பவம் குறித்து பழங்குடியின மக்களின் உரிமைக்காகச் செயல்படும் 'மக்கள் மன்றம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மகேஷ் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரது வழிகாட்டுதலின்படி, பொன்னேரிகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் மனுவைப் பெற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். கூலித் தொழிலாளியை கடனுக்காக மருத்துவமனைக்கு அனுப்பாமல் உயிரைப் பறித்த மரக்கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்