

மூன்று நாட்களாக போராடியும் நடவடிக்கை இல்லை என்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இரட்டைக் குழந்தைகளை சுமக்கும் கர்ப்பிணிப் பெண் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், தனக்கு நீதி வேண்டும் என்றும் கோரி, இரட்டைக் குழந்தைகளை சுமக்கும் கர்ப்பிணிப் பெண் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் விசாரணையில், அவர் சென்னையைச் சேர்ந்த சுஹிர்தா என்பதும், டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில் கன்டென்ட் ரைட்டராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும், அவர் இரண்டு புத்தகங்களை எழுதியும் வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகங்களைப் படித்த திருப்பூரைச் சேர்ந்த நிதீஷ் ஒரு வாசகனாக அறிமுகம் ஆகியுள்ளார். “புத்தகம் நன்றாக உள்ளது" என்று கூறி அவருடன் பழக தொடங்கியுள்ளார். சென்னை ஐஐடி சார்பு நிறுவனமான ஈப்லின் நிறுவனத்தில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியராக பணியாற்றி வரும் நிதீஷுடன் சுஹிர்தாவிற்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
பின்னர் இருவரும் பேசி, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு, சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுஹிர்தாவின் ஜாதியை காரணம் காட்டி நிதீஷின் உறவினர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தான் கர்ப்பமானது தெரிந்த பிறகு, ஏப்ரல் 22 ஆம் தேதி நிதீஷ் தனது நண்பர்களான பிலிப்ஸ், பாலாஜி, பிரபுதா, பிரீத்தி உள்ளிட்டோருடன் வந்து தன்னை தாக்கியதுடன், தனக்கும் கருவில் இருந்த குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சுஹிர்தா குற்றம்சாட்டியுள்ளார்.
அதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான சுஹிர்தா, அவர்களின் கொலை மிரட்டலுக்கு பயந்து, அயர்லாந்தில் தனக்குக் கிடைத்த வேலைக்குச் சென்றதாகவும், தற்போது இரட்டைக் குழந்தைகளை சுமக்கும் ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அமைக்கப்பட்டுள்ள "சிங்கப்பெண் அதிரடிப்படை" மூலம் தனக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திருப்பூருக்கு வந்து அவர்களை தொடர்பு கொண்டதகாவும் தெரிவித்தார். சிங்கப்பெண் அதிரடிப்படை அதிகாரிகள் "எங்களால் எதுவும் செய்ய முடியாது… பொறுமையாக காத்திருங்கள்" என்று கூறுவதாகவும் தெரிவித்தார். அதனையடுத்து வீரபாண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் மூன்று நாட்களாக தன்னை அலைக்கழித்து வருவதாகவும், இதுவரை CSR கூட பதிவு செய்யாமல் இருந்ததாகவும் வேதனையுடன் கூறினார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பிறகே தற்போது CSR பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சுஹிர்தா "முதலமைச்சர் எத்தனை நல்ல திட்டங்களை அறிவித்தாலும், களத்தில் அவை முழுமையாக செயல்படுத்தப்படுவதில்லை. இன்னும் அலட்சியப் போக்குதான் நிலவுகிறது; அதற்கு நானே ஒரு உதாரணம். காதலித்து ஏமாந்துவிட்டேன். எனக்கு நீதி கிடைக்க போராடி வருகிறேன். தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்" என்று அவர் வேதனையுடன் கூறினார்.
இதையடுத்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், "சிங்கப்பெண் அதிரடிப்படை" அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு தண்ணீர் வழங்கி, அவரது புகார் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால், "கடந்த மூன்று நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றும் “தற்போது ஊடகங்களை சந்தித்த பிறகே உதவுவதாக கூறுகின்றனர்" என்று குற்றம்சாட்டிய சுஹிர்தா, நாளை தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்த உள்ளேன் என்று குறிப்பிட்டார். இந்த கர்ப்பிணிப் பெண்ணின் போராட்டத்தால் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.