“ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை” - தனியாக இருப்பதை கவனித்து அத்துமீறல்.. ‘ரயில் மதத்’ சேவையால் உடனடி நடவடிக்கை!

சிலிகுரி சந்திப்பில் ரயிலில் ஏறியதாகவும், பெட்டி காலியாக இருப்பதை பார்த்து அதற்குள் சென்றதாகவும்...
delhi train issue
delhi train issue
Published on
Updated on
1 min read

டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்தை நோக்கிச் சென்ற சிக்கிம் மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயிலில், கர்ப்பிணிப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே ஊழியர்களின் உடனடி நடவடிக்கையால், சம்பவத்தில் தொடர்புடைய நபர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் மாவட்டம் கால்சினி பகுதியைச் சேர்ந்த 20 வயது பழங்குடியினப் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த நிலையில், டெல்லியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக பழைய டெல்லி ரயில் நிலையத்தில் சிக்கிம் மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார்.

கர்ப்பிணியாக இருந்ததால், மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அந்த பெட்டியில் சில பயணிகள் இருந்த நிலையில், அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் அவர்கள் இறங்கியுள்ளனர். இதனால், ஹசிமாரா ரயில் நிலையத்தை கடந்த போது அந்த பெட்டியில் கர்ப்பிணிப் பெண் மட்டும் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டம் ரங்கியா பகுதியைச் சேர்ந்த 30 வயது கவுதம் மகதோ என்பவர், சிலிகுரி சந்திப்பில் ரயிலில் ஏறியதாகவும், பெட்டி காலியாக இருப்பதை பார்த்து அதற்குள் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அங்கு தனியாக இருந்த கர்ப்பிணிப் பெண்ணை அவர் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த பெட்டியில் பயணித்த ரயில்வே மின்சாரப் பிரிவு ஊழியர்கள் உடனடியாக, ரயில்வே அவசர உதவி சேவையான ‘ரயில் மதத்’ மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணும் தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசு ரயில்வே போலீசார் அலிப்பூர்துவார் சந்திப்பு ரயில் நிலையத்தில் தயார் நிலையில் காத்திருந்தனர்.

இரவு சுமார் 9.20 மணியளவில் ரயில் அங்கு வந்தடைந்ததும், போலீசார் ரயிலை சுற்றிவளைத்து குற்றச்சாட்டுக்குள்ளான கவுதம் மகதோவை கைது செய்தனர். படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் அலிப்பூர்துவார் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கவுதம் மகதோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com