

புதுச்சேரி பிள்ளைச்சாவடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி லோகநாயகி. ராதாகிருஷ்ணன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு 45 வயதில் ராஜ்குமார் மற்றும் 42 வயதில் சந்தானம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். எனவே லோகநாயகி தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். இதில் லோகனாயகி தனது இரண்டாவது மகன் மீது பாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ராஜ்குமார், தனது தாய் லோகநாயகியிடம் அவர்களுக்கு புதுச்சேரியில் உள்ள வீடு மற்றும் தமிழகத்தில் உள்ள 2 கானி நிலம் ஆகிய சொத்துக்களை பிரித்து தரும்படி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஆனால் லோகநாயகி சொத்தை பிரித்து தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் அடிக்கடி “எப்ப தான் சொத்தை பிரித்து தருவீங்க ” என தாய் மகனுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது தொடர்ந்து ராஜ்குமார் சொத்தை கேட்டு தொல்லை கொடுத்து அவரிடம் மரியாதையில்லாமல் நடந்து கொண்டதால், சொத்துக்களை முழுவதுமாக இரண்டாவது மகன் சந்தானத்திற்கும் அவரது பிள்ளைகளுக்கும் தந்து விடுவதாக லோகநாயகி கூறியுள்ளார். இதை கேட்ட ராஜ்குமார் தாய் மீது கடும் கோபத்தில் இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு ராஜ்குமார் மதுபோதையில் தனது 17 வயது மகனுடன் தாய் லோகநாயகியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
தனியாக இருந்த லோகநாயகியிடம் சொத்தை பிரித்து தரும்படி கேட்டு மீண்டும் தகராறு செய்துள்ளார். லோகநாயகி சொத்தை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து லோகநாயகியின் கழுத்தை அறுத்துள்ளார். உடன் அவர் மகனும் லோகநாயகியை கட்டையால் அடித்துள்ளார். அப்போது லோகநாயகியின் அலறல் சத்ததை கேட்ட அக்கம் பக்கத்தினர் எப்போதும் நடைபெறும் சண்டைதானே என நினைத்து கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். சிறிது நேரத்தில் தாயை கொலை செய்து விட்டு ராஜ்குமார் தனது மகனுடன் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார்.
பின்னர் வீட்டின் கதவு திறந்து இருந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் லோகநாயகி இருப்பதை கண்டு அவரது இளைய மகனுக்கு தகவல் சொல்ல, அவர் உடனடியாக காலாபட்டு போலீசாருக்கு தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலமாக கிடந்த மூதாட்டி லோகநாயகியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுகாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து, ராஜ்குமாரையும் அவரது 17 வயது மகனையும் கைது செய்து இருவரையும் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி காலாபட்டில் உள்ள மத்திய சிறையில் ராஜ்குமாரையும், அவரது 17 வயது மகனை அரியாங்குப்பத்தில் உள்ள சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். மேலும் சொத்து பிரச்சினைக்காக பெற்ற தாயை மகன் மற்றும் பேரன் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.