

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே குருங்கலூரைச் சேர்ந்தவர் 23 வயதுடைய காளிதாஸ். இவர் பெரிதும் படிக்காத நிலையில் புதுக்கோட்டையில் உள்ள சமோசா தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். எனவே அருகில் உள்ள ஊர்களில் நடக்கும் சந்தைகளில் சமோசா கடை போடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அதுபோல அரிமளம் சந்தையில் சமோசா கடை போட்ட போது சமோசா வாங்க வந்த அப்பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய உஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றனர். இருவரும் அடிக்கடி வெளியில் செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் வழக்கம் போல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் வனப்பகுதிக்கு சென்றிருக்கின்றனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த காளிதாஸ் காதலியின் துப்பட்டாவை பயன்படுத்தி அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்த காளிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் காளிதாஸின் காதலி உஷா “ நாங்க ரெண்டு பெரும் போய் பேசிட்டு இருந்தோம் அப்போ சண்டை வந்து என்னை அவரு அடிச்சிட்டாரு நான் மயங்கி விழுந்துட்டேன், மயக்கம் தெளிஞ்சு பார்த்த அப்போ தான் அவர் தற்கொலை பண்ணிக்கிட்டு இறந்தது தெரிந்தது” என வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த காளிதாஸின் குடும்பத்தினர் “உஷா காளிதாஸ் டார்ச்சர் செய்து வந்ததாகவும் எப்போதும் போன் பேச வேண்டும் என தொல்லை கொடுத்ததாகவும் காளிதாஸ் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை உஷா தான் எதோ செய்திருக்கிறார்” என காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளனர். மேலும் காளிதாஸின் மரணத்தில் உள்ள மர்மம் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காதல் விவகாரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.