

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது. நன்கு தெரிந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடந்த மூன்று திருமண உறவுகளால் ஏற்பட்ட பிணைப்பை, ஒரு பெண்ணின் கள்ளக்காதல் மற்றும் வஞ்சகம் சுக்குநூறாக உடைத்துள்ளது. "ஹனிமூன் கொலை" என்று தற்போது வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவத்தில், தனது முன்னாள் காதலனுடன் சேர்ந்து தனது கணவனையே அந்தப் பெண் கொடூரமாகக் கொலை செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
சதுல்ஷாகரைச் சேர்ந்த 23 வயதான அஞ்சலிக்கும், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள 1-கேஎல்எம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ஆசிஷுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. ஆசிஷ் புவியியல் துறையில் முதுகலை முடித்துவிட்டு பி.எட் படித்துக் கொண்டிருந்தார். அஞ்சலி எம்.காம் படித்துக் கொண்டிருந்தார். ஆசிஷ் தனது பெரியப்பா மற்றும் பெரியம்மாவால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர். அஞ்சலி அந்தப் பெரியம்மாவின் உடன்பிறந்தவர் மகள் என்பதால், இரு குடும்பங்களும் மிக நெருக்கமான உறவில் இருந்தன. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இவர்களது திருமணம் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
சம்பவம் நடந்த அன்று மாலை, ஆசிஷ் மற்றும் அஞ்சலி ஆகியோர் ஆசிஷின் உறவினர் அங்கித் மற்றும் அவரது மனைவியுடன் நடைப்பயிற்சிக்குச் சென்றுள்ளனர். வழக்கமான பாதையில் சென்று கொண்டிருந்தபோது, அங்கித்தையும் அவரது மனைவியையும் வீட்டில் விட்டுவிட்டு, அஞ்சலியின் பிடிவாதத்தால் ஆசிஷ் மட்டும் அவருடன் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வெறிச்சோடிய பாதைக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆசிஷும் அஞ்சலியும் அப்பகுதியில் மயங்கிக் கிடப்பதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்தது. இது ஒரு சாலை விபத்து என்று முதலில் நம்பப்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆசிஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். அஞ்சலி தனக்கு விபத்து ஏற்பட்டதாகவும், தனது நகைகள் திருடப்பட்டுவிட்டதாகவும் கூறி மயக்க நிலையில் இருப்பது போல நாடகமாடினார்.
ஆனால், ஆசிஷின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் அஞ்சலி கூறிய முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் காவல்துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தின. தீவிர விசாரணைக்கு பிறகு, அஞ்சலி தனது முன்னாள் காதலன் சஞ்சு என்பவருடன் சேர்ந்து தீட்டிய சதித்திட்டம் அம்பலமானது. திருமண விழாக்களில் வெயிட்டராக வேலை பார்த்து வந்த சஞ்சுவுடன் அஞ்சலிக்குத் திருமணத்திற்கு முன்பே காதல் இருந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு அஞ்சலி தனது தாய் வீட்டிற்குப் படிக்கச் சென்றபோது, மீண்டும் சஞ்சுவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து ஆசிஷைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
சம்பவத்தன்று சஞ்சுவும் அவனது நண்பர்களான ரோகித் மற்றும் பாதல் ஆகியோரும் புதர்களுக்குப் பின்னால் மறைந்திருந்தனர். அஞ்சலி தனது கணவனை அந்த இடத்திற்கு அழைத்து வந்தபோது, அவர்கள் மூவரும் ஆசிஷைத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பின்னர் இது விபத்து போலத் தெரிய வேண்டும் என்பதற்காக அஞ்சலி தனது கம்மல்களைக் காதலனிடம் கொடுத்துவிட்டு, அங்கேயே மயங்கி விழுந்தது போல நடித்தார். இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன ஆசிஷின் தந்தை, "அஞ்சலிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்; அவளது குடும்பத்தினரும் இதையேதான் விரும்புகிறார்கள்" என்று ஆக்ரோஷமாகக் கூறியுள்ளார்.
அஞ்சலியின் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தால் மிகுந்த அவமானத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர். "எங்கள் மகளால் நாங்கள் தலைகுனிந்து நிற்கிறோம்; அவளுக்கு மரண தண்டனை கிடைக்க வேண்டும்" என்று அவளது மாமாவே கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். நன்கு வசதியான குடும்பத்தில் பிறந்த, படித்த ஆசிஷை விட்டுவிட்டு, ஏழ்மையான நிலையில் இருந்த படிக்காத ஒரு காதலனுக்காக அஞ்சலி செய்த இந்த வஞ்சகம் அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அஞ்சலி மற்றும் அவரது காதலன் உட்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.