“மனைவிக்கு போன் செய்து கதறிய ஆகாஷ்.. அடுத்த நொடியே நடந்த கொலை” - ஆறு மாதங்களாக பிளான் போட்டு பழி தீர்த்த கும்பல்!

அச்சமடைந்த ஆகாஷ், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மண்டலமாணிக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளார்...
Aakash Murder
Aakash Murder
Published on
Updated on
2 min read

ராமநாதபுரம் மாவட்டம் செந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதுடைய ஆகாஷ். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிம்மானா பேகம் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்த ஆகாஷ், கடந்த சில மாதங்களாக வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செந்தனேந்தல் பகுதியில் கரிமூட்டம் போடும் தொழில் தொடர்பாக ஏற்பட்ட போட்டி காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் ஆகாஷுக்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் முன்விரோதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலின்போது ஆகாஷ், முருகனின் கையை வெட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கமுதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே, சுமார் ஆறு மாதங்களாக வெளியூரில் தங்கி வேலை பார்த்த ஆகாஷ், கடந்த 20 நாட்களுக்கு முன்பு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது முருகனின் மகனான 26 வயதுடைய விஜய், ஆகாஷை கொலை செய்யப்போவதாக தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த ஆகாஷ், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மண்டலமாணிக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று தனிப்பட்ட சில வேலைக்காக மண்டலமாணிக்கம் கிராமத்தில் இருந்து மதுரை நோக்கி ஆகாஷ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருச்சுழி வழியாக அவர் சென்றபோது, விஜய் மற்றும் அவரது நண்பர்கள் ஆயுதங்களுடன் அவரை பின்தொடர்ந்து துரத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த ஆகாஷ், தனது மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, சிலர் ஆயுதங்களுடன் தன்னை துரத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி மீண்டும் ஆகாஷை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது செல்போனை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் பதற்றமடைந்த மனைவி மற்றும் உறவினர்கள், ஆகாஷ் சென்ற சாலையில் தேடிச் சென்றுள்ளனர். அப்போது சாலையில் ஆகாஷ் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விஜய் மற்றும் அவரது நண்பர்கள் ஆயுதங்களால் தாக்கி ஆகாஷை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக அவரது மனைவி திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

Admin

போலீசாரின் விசாரணையில், கரிமூட்டம் போடும் தொழில் தொடர்பாக ஆகாஷுக்கும் முருகனுக்கும் இடையே ஏற்பட்டிருந்த முன்விரோதமே, பின்னர் முருகனின் மகன் விஜய் மற்றும் அவரது நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலாக மாறி கொலைச் சம்பவத்தில் முடிந்ததாக தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆகாஷ் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் விஜய் (26), அவரது நண்பர்களான ரித்தீஷ் (24), முரளி (27), காளிதாஸ் (21), சக்திவேல் (19), தினேஷ்குமார் (19) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் திருச்சுழி காவல் நிலையத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கரிமூட்டம் போடும் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக தொடங்கிய முன்விரோதம், காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்படும் அளவுக்கு சென்ற சம்பவம் திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com