ராணிப்பேட்டை மாவட்டம், கம்மவான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய இம்ரான். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்களை அவர்களது வீடுகளில் இறக்கிவிடுவதற்காக இம்ரான் வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருங்காலிகுப்பம் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென வேனை வழிமறித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், வேனில் இருந்த இம்ரானை கீழே இறக்கி உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த இம்ரான், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இம்ரான் உயிரிழந்தார்.
இதுகுறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில், இம்ரானுக்கும் அவரது உறவினரான ரமீஷ்கானுக்கும் இடையே ஏற்கனவே சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக ரமீஷ்கான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இம்ரானை தாக்கியது என போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கம்மவான்பேட்டையைச் சேர்ந்த ரமீஷ்கான் (33), அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் என்ற பூனை (23), கண்ணமங்கலத்தைச் சேர்ந்த கிஷோர் (24), காட்டுகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (24), லட்சுமிபுரம் கத்தாழம்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா (20) ஆகிய 5 பேரை திமிரி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திமிரி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளி குழந்தைகளை இறங்கிவிட சென்றவரை சொத்து தகராறு காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்