பிரேசிலில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த 19 வயது பெண்ணின் குழந்தைகள் வெவ்வேறு தந்தைகளை கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பிரேசிலைச் சேர்ந்த 19 வயதுப் பெண் ஒருவர், வெவ்வேறு உயிரியல் தந்தைகளைக் கொண்ட இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள நிலையில் பலரையும் இது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது மிகவும் அரிதான நிகழ்வு என்றாலும், இது நடக்க வாய்ப்பில்லாதது அல்ல என்று அப்பெண்ணின் மருத்துவர் கூறியதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது குறித்து அப்பெண்ணே மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், "இப்படி ஒன்று சாத்தியம் என்று தனக்குத் தெரியவே தெரியாது" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு ஆண்களுடன் அவர் உடலுறவு கொண்டதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அப்பெண் கூறியுள்ளார். அவர் கருவுற்றதில் இருந்து 9 மாதங்களுக்குப் பிறகு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். மேலும், அவர்களின் முதல் பிறந்தநாள் வந்தபோது, அவர்களின் தந்தை யார்? என்று அவர் சந்தேகிக்க தொடங்கியுள்ளார். எனவே, அவர் ஒரு டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு செய்தார். அவர் தந்தை என்று நம்பிய ஆணின் டிஎன்ஏ-வை சேகரித்த நிலையில், ஒரு குழந்தையின் டிஎன்ஏ மட்டுமே அவருடன் பொருந்திப் போயுள்ளது. தீடிரென அப்பெண், "நான் வேறொரு ஆணுடன் உடலுறவு கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது, மேலும் பரிசோதனை செய்ய அவரை அழைத்தேன், அதன் முடிவு சாதகமாக இருந்தது. முடிவுகளைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். இப்படி நடக்கக்கூடும் என்று எனக்குத் தெரியாது, மேலும் குழந்தைகள் மிகவும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்," என்று அவர் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அவருடைய கர்ப்ப காலம் சுமுகமாக இருந்ததாகவும், பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவரது மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அப்பெண்ணின் மருத்துவரான டாக்டர் துலியோ ஜார்ஜ் ஃபிராங்கோ, உள்ளூர் செய்தி ஊடகத்திடம், “ஒரே தாயின் இரண்டு கருமுட்டைகள் வெவ்வேறு ஆண்களால் கருவுற்றால் இது நிகழ வாய்ப்புள்ளது. குழந்தைகள் தாயின் மரபணுப் பொருளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு நஞ்சுக்கொடிகளில் வளர்கின்றன” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, இதுவரை உலகில் இதுபோன்ற 20 நிகழ்வுகள் மட்டுமே நடந்துள்ளன என்று கூறியுள்ளார். இந்த நிகழ்வு 'ஹெட்டெரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகுண்டேஷன்' என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் பசுக்கள், பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற விலங்குகளில் நிகழ்கிறது. இது பெண் விலங்குகள் பல குட்டிகளை ஈனும் வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக வேண்டுமென்றே பயன்படுத்தும் ஒரு தந்திரமாகும். ஆனால் மனிதர்களுக்கு இது தேவையில்லை, எனவே இந்த செயல்முறை நிகழ்வதில்லை. விந்தணுக்கள் பெண் இனப்பெருக்கப் பாதையில் சில நாட்கள் உயிர்வாழும்போது அல்லது ஒரு பெண்ணால் ஒரே நேரத்தில் இரண்டு கருமுட்டைகள் உற்பத்தி செய்யப்படும்போது இந்த அரிய நிகழ்வு ஏற்படலாம் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.