மருமகளின் மர்ம மரணம்... "சிக்கிய முன்னாள் பெண் ஜட்ஜ்!" சிபிஐ நடத்திய 7 மணி நேர அதிரடி விசாரணை... இறுதியில் கைது!

ஒரு முன்னாள் உயர் நீதித்துறை அதிகாரி வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
Kripala Singh arrested
Kripala Singh arrestedKripala Singh arrested
Published on
Updated on
2 min read

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், இந்த மாத தொடக்கத்தில் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண் ட்விஷா சர்மாவின் மரண விவகாரத்தில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ட்விஷாவின் மாமியாரும், ஓய்வுபெற்ற முன்னாள் பெண் நீதிபதியுமான கிரிபாலா சிங் என்பவரை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு முன்னாள் உயர் நீதித்துறை அதிகாரி வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

வியாழக்கிழமை காலை சுமார் 10:30 மணியளவில் போபாலில் உள்ள கிரிபாலா சிங்கின் வீட்டிற்கு அதிரடியாக நுழைந்த சிபிஐ அதிகாரிகள், அவரிடம் பல மணி நேரம் முடக்கி வைத்துத் தீவிர விசாரணை நடத்தினர். பல கேள்விகளுக்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததைத் தொடர்ந்து, மாலை 5:10 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் அவரது கைதை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்தனர். இந்த விசாரணையின் போது, அதிநவீன 3D கேமராக்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு, குற்றம் நடந்த வீட்டின் ஒட்டுமொத்தப் பகுதியையும் சிபிஐயின் தடய அறிவியல் நிபுணர்கள் வீடியோ பதிவு செய்து, அக்கம் பக்கத்து மாடிகளில் இருந்து இந்த இடம் தெரிகிறதா? என்பது வரை சல்லடை போட்டுத் தேடி ஆய்வு செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜட்ஜ் கிரிபாலா சிங் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023-ன் கீழ் மிகவும் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரதட்சணை மரணம், கணவர் மற்றும் உறவினர்களால் பெண் கொடுமைக்குள்ளாக்கப்படுதல் மற்றும் பொதுவான உள்நோக்கத்துடன் பல நபர்கள் இணைந்து குற்றச் செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், 1961-ம் ஆண்டின் வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து, கீழ் நீதிமன்றம் அவருக்கு வழங்கியிருந்த ஜாமீன் நிவாரணத்தை ரத்து செய்த அடுத்த நாளே இந்த அதிரடிக் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ட்விஷா சர்மாவின் உடலில் மரணத்திற்கு முன்பு ஏற்பட்ட 7 கடுமையான காயங்கள் இருந்ததைச் சுட்டிக்காட்டி, இது ஏதோ ஒரு பெரிய குற்றச் செயல் நடந்திருப்பதைக் காட்டுகிறது என்று சீரியஸாகக் கவலை தெரிவித்தது. மேலும், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கிரிபாலா சிங் விசாரணைக்கு ஒத்துழைக்காததும், ட்விஷா சர்மா மனரீதியாகக் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் வாட்ஸ்அப் சாட்டிங் ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. ட்விஷா தனது கணவர் வீட்டில் மிக மோசமாக மாட்டிக் கொண்டு சித்திரவதையை அநுபவித்ததாக அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் வாதிட்டதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், முன்னாள் நீதிபதியின் ஜாமீனை ரத்து செய்தது.

குறிப்பாக, கைது செய்யப்பட்டுள்ள கிரிபாலா சிங் ஒரு ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரி என்பதால், அவருக்குச் சைபர் கிரைம், சைபர் ஃபாரன்சிக்ஸ் மற்றும் குற்றம் நடந்த இடத்தை எப்படிக் கையாள்வது போன்ற சட்ட நுணுக்கங்கள் அனைத்தும் அக்குவேற ஆணிவேறாகத் தெரியும் என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. தனது இந்தத் திறமையைப் பயன்படுத்தி அவர் வழக்கின் மிக முக்கியமான ஆதாரங்களை அழித்திருக்கலாம் அல்லது சாட்சிகளைக் கலைத்திருக்கலாம் என்ற கடுமையான சந்தேகத்தையும் உயர் நீதிமன்றம் மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டது. முன்னதாக, கிரிபாலா சிங்கின் மகனும், ட்விஷாவின் கணவருமான வழக்கறிஞர் சமர்த் சிங் 10 நாட்கள் தலைமறைவாக இருந்துவிட்டு கடந்த வாரம் நீதிமன்றத்தில் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 12 அன்று நடந்த ட்விஷா சர்மாவின் மர்ம மரண வழக்கை மாநில போலீசாரிடமிருந்து கடந்த திங்கட்கிழமைதான் சிபிஐ அதிகாரப்பூர்வமாகக் கையில் எடுத்தது. சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, திருமணத்திற்குப் பிறகு பெண் வீட்டார் தங்களின் மகளை மாப்பிள்ளை வீட்டிற்கு வழி அனுப்பி வைக்கும் 'விதாய்' சடங்கின் போது, கிரிபாலா சிங் ட்விஷாவின் குடும்பத்தினரிடம் 2 லட்சம் ரூபாய் பணத்தை வரதட்சணையாகக் கேட்டு மிரட்டியுள்ளார். ட்விஷா கட்டாயப்படுத்தியதன் பேரில் அவரது குடும்பத்தினர் அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளனர் என்பதும், அதன் பிறகும் தொடர்ந்து வந்த வரதட்சணைக் கொடுமைகள்தான் இந்த இளம் பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது என்பதும் சிபிஐயின் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com