“கூலித்தொழிலாளி மரணத்தில் விலகாத மர்மம்” - சடலம் கூட கிடைக்காமல் தவிக்கும் மனைவி.. மாற்றிப் பேசி அலட்சியம் காட்டுகிறதா போலீஸ்?

ஆய்வாளர் பூர்ணிமா முதலில் சடலத்தை எரித்ததாகவும்.. வாக்குவாதம் முற்றிய சிறிது நேரத்தில் சடலத்தை புதைத்ததாகவும்...
Salem Missing Labourer Case
Salem Missing Labourer Case
Published on: 
Updated on: 
2 min read

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காணாமல் போன கூலித் தொழிலாளி, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு, அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். ஆத்தூர் அருகே உள்ள நாகியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் பகுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் கவலையடைந்த அவரது மனைவி ஜெயலட்சுமி, கணவரைக் காணவில்லை எனத் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், கடந்த 27ஆம் தேதி ஊனத்தூர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது அடையாளம் உடனடியாகத் தெரியாததால், உடலை மீட்ட போலீசார் உரிய அனுமதியுடன் நல்லடக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுப்பிரமணி காணாமல் போனது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்தபோது, அடக்கம் செய்யப்பட்ட நபர் சுப்பிரமணியாக இருக்கலாம் என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

Salem Missing Labourer Case
Salem Missing Labourer Case

இதையடுத்து, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தலைவாசல் காவல் நிலையத்திற்குச் சென்று, சடலத்தை அடக்கம் செய்வதற்கு முன்பு குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அங்கிருந்த காவல் நிலைய ஆய்வாளர் பூர்ணிமா முதலில் சடலத்தை எரித்ததாகவும்.. வாக்குவாதம் முற்றிய சிறிது நேரத்தில் சடலத்தை புதைத்ததாகவும் மாற்றி மாற்றி பதில் கூறியுள்ளார். மேலும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கேட்ட கேள்விகளுக்கு சரிவர பதில் அளிக்கவில்ல என்றும் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சுப்பிரமணியின் மனைவி ஜெயலட்சுமி மற்றும் உறவினர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இத்திரு சென்று விசாரித்த நிலையில் 27 ஆம் தேதி மாலை உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. எனவே உடனடியாக இது குறித்து காவல் ஆய்வாளர் பூர்ணிமாவிடம் கேட்ட போது அவர் “மருத்துவமனை சென்று பாருங்கள் உடல் இருந்தாலும் இருக்கலாம்” என அலட்சியமாக பதிலளித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். சுப்பிரமணி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி, தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, உயிரிழந்த நபர் குறித்து ஐந்து நாட்களுக்கும் மேலாக எந்தத் தகவலும் கிடைக்காததால், உரிய அனுமதி பெற்று உடல் அடக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர். மேலும், புகார் அளிக்கப்பட்டால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். காணாமல் போன கூலித் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளதால் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com