

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் எதிரே உள்ள “காபி டைம் ஸ்வீட்ஸ்” என்ற பெயரில் செயல்பட்டு வரும் தனியார் பேக்கரி முன்பு தாவாந்தெரு பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் நந்தகுமாரும் ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் பைனான்ஸ் கலெக்சன் ஏஜண்டாக பணிபுரிந்து வரும் மாணிக்கம் ஆகிய இருவரின் இருசக்கர வாகனங்களும் லேசாக மோதியதாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முதலில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மாணிக்கம் மற்றும் அவரது நண்பர்கள் முதலில் நந்தகுமாரை தாக்கியதாக சொல்லப்படும் நிலையில் பதிலுக்கு நந்தகுமார் மாணிக்கத்தை தாக்கிய போது இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டு நண்பர்களோடு பேக்கரிக்குள் புகுந்த மாணிக்கத்தை விடாமல் பின் தொடர்ந்து சென்ற நந்தகுமார் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மாணிக்கம் மீண்டும் நந்தகுமார் வைத்திருந்த அரிவாளை பறித்து அவரை கடுமையாக வெட்டியிருக்கிறார்.
இதனை பார்த்த பேக்கரியில் இருந்த மற்ற நபர்கள் காவல் துறையினருக்கு தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் கண்டித்து அவர்களிடமிருந்து அரிவாளை கைப்பற்றினர். பின்னர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்குள்ள மருத்துவர்கள் மூலம் மாணிக்கம் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் சினிமாவை போல இருவரின் மோதல் அரிவாள் வெட்டு குறித்தான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வண்டி உரசிய சண்டைக்கு இருவரும் மாறி மாறி அரிவாளால் வெட்டிக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.