
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 65 வயதான ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி செல்வ குமார். இவருக்கு திருமணமாகி சண்முகவள்ளி என்ற மனைவியும் அன்பழகன் மற்றும் கிரி என்ற இரண்டு மகன்களும் இருந்த நிலையில் சண்முகவள்ளி மனநிலை பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அன்பழகன் அதே பகுதியில் வாகன உதிரி பாகங்கள் கடை வைத்து நடத்தி வரும் நிலையில் அவரது தம்பி கல்லூரி படித்து வருகிறார். செல்வ குமாருக்கு இருவரையும் பார்த்துக் கொண்டு சமையல் மாற்றம் வீடு வேலைகளை கவனிப்பது சிரமமாக இருந்துள்ளது. இதனை அவரது நண்பர்களிடம் செல்வகுமார் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது செல்வகுமாரின் நண்பர்கள் அவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி செல்வகுமாரும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெண் தேவை என நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அன்பழகன் இது குறித்து தனது தந்தையிடம் “எதுக்கு இப்படி ஒரு விளம்பரம் கொடுத்தீங்க? நீங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு யாரு பொண்ணு குடுப்பாங்க? எனக்கு சரிசமமா நீங்களும் கல்யாண மேடையில அமர போறிங்களா?" என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் இரும்பு கம்பியை பயன்படுத்தி அன்பழகனை தாக்கியுள்ளார். பின்னர் அதே கம்பியை வைத்து அன்பழகன் தனது தந்தையை தாக்கி கீழே தள்ளி கத்தியை வைத்து கழுத்தை அறுத்துள்ளார். அப்போது செல்வகுமார் அலறிய சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் உயிரிழந்ததை அடுத்து தகவலின் அடிப்படையில் அன்பழகனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தந்தையை மகனே கழுத்தை அறுத்து கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.