
சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை வடக்கு ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் 21 வயதான சரவணன் என்கிற வனிதா என்ற திருநங்கை. இவர் ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு பூக்கடை மற்றும் செல்போன் கடைகளில் வேலைக்கு சென்று வந்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இருந்தே சரவணன் திருநங்கையாக மாறி வந்துள்ளார். இதையடுத்து ஆறு மாதங்களுக்கு முன்பு மும்பை சென்று முழுமையான திருநங்கையாக மாற அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சரவணன் தனது பெயரை வனிதா என மாற்றிக் கொண்டு , பெற்றோர் வீட்டுக்கு செல்லாமல் வடக்கு ரயில்வே காலனி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார். இரவு நேரங்களில் மட்டும் இந்த வீட்டிற்கு திருநங்கை வனிதா வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் திருச்செங்கோட்டை சேர்ந்த 25 வயதுடைய நவீன் என்பவருக்கும், திருநங்கை வனிதாவுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியுள்ளது.
பின்னர் நவீன் அடிக்கடி வனிதாவை பார்க்க வடக்கு ரயில்வே காலனிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வனிதா தாதகாப்பட்டி பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது நவீன் வனிதாவை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காலை வனிதாவிடம் பணம் வாங்குவதற்காக அவரது அக்கா மரகதம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வனிதா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மரகதம் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை பதிவு செய்து உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் வனிதாவின் காதலன் நவீன் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரும்பு கம்பியால் திருநங்கை வனிதா அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெற்றோர் மற்றும் சக திருநங்கைகளுக்கு இடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.