“பீர் பாட்டிலால் தாக்கி கொலை” - கால்வாயில் கிடந்த சடலம்.. 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டதன் பின்னணி!

தனது கையில் இருந்த பீர் பாட்டிலால் செந்தில்குமாரின் தலையில் தாக்கியதாகவும்...
Beer Bottle Attack Murder
Beer Bottle Attack Murder
Published on
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கெம்பநாயக்கன்பாளையம் அடுத்த அத்தியப்பன் கவுண்டன்புதூர் பகுதியில் இன்று அதிகாலை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக பொதுமக்கள் சத்தியமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வீட்டு மனைகள் அமைக்கப்பட்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள கால்வாய் பகுதியில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதை கண்டனர். இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அத்தியப்பன் கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய வைத்தீஸ்வரன் மற்றும் கோவை மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய செந்தில்குமார் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகவும், தகராறு முற்றிய நிலையில் வைத்தீஸ்வரன் தனது கையில் இருந்த பீர் பாட்டிலால் செந்தில்குமாரின் தலையில் தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வைத்தீஸ்வரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வைத்தீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்த சத்தியமங்கலம் போலீசார், அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறு தான் கொலைக்கு காரணமா அல்லது இருவருக்கும் இடையே வேறு ஏதேனும் முன்பகை உள்ளதா என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தியமங்கலம் பகுதியில் நள்ளிரவில் ஒருவர் பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com