“15 பேரை காவு வாங்கிய கல்குவாரி” - குழந்தைகளும் உயிரிழந்த சோகம்.. அலட்சியம் காட்டுகிறதா அரசு?

5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீருக்குள் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்...
Tiruttani Abandoned Quarry Pit
Tiruttani Abandoned Quarry Pit
Published on
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் நகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இதன் பின்புறம் தமிழக அரசால் கைவிடப்பட்ட சுமார் 100 அடி ஆழம் கொண்ட கல்குவாரி குட்டை ஒன்று உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை அந்த கல்குவாரி குட்டை பகுதியில் ஒருவர் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, வாலிபர் ஒருவர் திடீரென தண்ணீருக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. அவர் தண்ணீரில் மிதப்பதை பார்த்ததாக அருகில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் அந்த நபர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து திருத்தணி நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், தீயணைப்புப் படையினரை வரவழைத்தனர். கல்குவாரி குட்டை அதிக ஆழம் கொண்டதாக இருந்ததால், தண்ணீரில் மூழ்கிய நபரை மீட்கும் பணி சவாலாக இருந்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீருக்குள் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும், குட்டைக்குள் உடைந்த மது பாட்டில்கள் கிடந்ததாகவும், தண்ணீருக்குள் இருந்த கூர்மையான கற்களால் தேடுதல் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களின் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், தொடர்ந்து முயற்சி மேற்கொண்ட தீயணைப்பு வீரர்கள், தண்ணீரில் மூழ்கியிருந்த நபரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இதையடுத்து, உயிரிழந்தவர் யார் என்பது குறித்து அருகில் இருந்த நகராட்சி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்தவர் பாபு என்பதும், அவர் திருத்தணி நகராட்சியில் நாய் பிடிக்கும் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பாபு, கடந்த 3 ஆண்டுகளாக திருத்தணி நகராட்சியில் பணியாற்றி வந்ததாகவும் நகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.பாபு எதற்காக கல்குவாரி குட்டை பகுதிக்கு வந்தார், அவர் எப்படி தண்ணீருக்குள் விழுந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது விபத்தா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருத்தணி போலீசார் பாபுவின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கல்குவாரி குட்டையைச் சுற்றி கடந்த பல ஆண்டுகளாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, ஆபத்தான பகுதி என எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவில்லை என்றும், குட்டையைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த 13 ஆண்டுகளில் குழந்தைகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் இந்த குட்டையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அரசால் நடத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட கல்குவாரி குட்டைகளில் ஆழமான அளவில் தண்ணீர் தேங்குவதால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, இதுபோன்ற பகுதிகளில் முள்வேலி உள்ளிட்ட தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த வாரம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருத்தணி நகராட்சி பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாமல் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரி குட்டைகளை அடையாளம் கண்டு, அவற்றைச் சுற்றி உடனடியாக பாதுகாப்பு வேலிகள் அமைப்பதுடன், நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தணி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com