

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, புதுகொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (30). இவருக்கு இரவு 8 மணியளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு மர்மநபர், தாலுகா அலுவலகத்தில் இருந்து தாசில்தார் பேசுவதாகவும், பழனியம்மாளின் பெயர், அவரது குடும்ப உறுப்பினர்களது பெயர்களை சரியாக கூறி பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய அந்த மர்ம கொரோனா போன்று புதுவிதமான நோய் ஒன்று பரவி வருவதாக கூறியுள்ளார். மேலும், இந்த நோய் தலைமுடி வழியாக பரவுவதால் வெளிநாடுகளில் மொட்டை அடித்துக் கொண்டு இந்த நோயில் இருந்து மக்கள் தப்பித்துள்ளதாக அந்த மர்ம நபர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு, மொட்டை அடித்தால் நோய் தாக்கம் ஏற்படாது என்றும் மொட்டை அடிக்கும் நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது, பெண்கள் என்றால் தலா, 15 ஆயிரம் ரூபாயும், பள்ளி, கல்லுாரி மாணவிகள் என்றால் தலா 45 ஆயிரம் ரூபாய் மற்றும் மடிக்கணினியும், ஆண்களுக்கு தலா 6,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அந்த மர்மநபர் தெரிவித்துள்ளார். மேலும், பேசிய அந்த மர்ம நபர், "புதுகொத்தாம்பாடிக்கு 18 டோக்கன் மட்டுமே உள்ளதால், உங்களது உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவித்து கொள்ளலாம்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து, (ஜூலை 27) மதியம் 2 மணியளவில் பணத்துடன் வருவதாகவும், அவர்கள் வருவதற்குள் மொட்டை அடித்து தயார் நிலையில் உள்ளவர்களுக்கு, அதிகாரிகள் பணம் வழங்குவார்கள் என்றும் அந்த மர்ம நபர் உறுதியாக நம்பிக்கையளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
அந்த மர்ம நபரின் பேச்சை நம்பிய 20 பேர், மொட்டை அடிக்க தயாராக இருந்துள்ளனர். இதில் காவேரி (56), ராமாயி (58), சித்ரா (60) ஆகிய மூன்று பேர் மொட்டை அடித்த நிலையில், பணம் தருவதாக கூறிய நபரை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அந்த மர்ம நபரின் போன் ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர்தான் , மொட்டை அடிக்கச் சொல்லி தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை அவர்கள் அறிந்துள்ளனர். இதனை பார்த்த மற்ற நபர்கள் மொட்டை அடிப்பதை தவிர்த்துள்ளனர். இதுகுறித்து, ஆத்துார் ஊரக போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், புதுகொத்தாம்பாடி பழனியம்மாள் கூறுகையில், ஆத்துார் தாலுகா அலுவலக தாசில்தார் பேசுவதாகவும், புதுவித நோய் பரவுவதை தடுக்க மொட்டை அடித்துக் கொள்ளவேண்டும் என்று கூறியதாக பழனியம்மாள் தெரிவித்துள்ளார்.
மொட்டை அடிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அவ்வாறு இல்லை எனில், அத்தொகையை அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்று அவர் கூறியதாக பழனியம்மாள் தெரிவித்துள்ளார். "சந்தேகமிருந்தால் ஏற்கனவே மொட்டை அடித்த நபர்களது புகைப்படங்கள் அனுப்புகிறேன்" என்று கூறி பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவிகள் மொட்டை அடிக்கும் புகைப்படங்களையும், கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் போன்றவற்றை 'வாட்ஸ்ஆப்பில்' அனுப்பி வைத்துள்ளார். பணம் கொடுப்பதற்கு சேர், டேபிள் போன்றவற்றை போட்டு தயார் நிலையில் வைத்திருங்கள் என்றும் அந்த மர்ம நபர் தொலைபேசியில் கூறியுள்ளார். இவற்றை எல்லாம் நம்பி, அதற்கான ஏற்பாடுகளை மக்கள் செய்த நிலையில் மதியம், 3 மணிக்கு மேல், உள்ளூர் நபரை வரவழைத்து, மூன்று பேர் மட்டும் மொட்டை போட்டுள்ளனர். அதன் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்து மொட்டை அடிக்கும்படி கூறி ஏமாற்றிய ஆசாமியை கண்டறிந்து தமிழக அரசும், போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனியம்மாள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மொட்டை அடித்தால் பணம் கிடைக்கும் என்று, மக்களும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுபோன்று, தமிழக அரசு பெயரை கூறி புதுவிதமான முறையில் பெண்களை குறிவைத்து மோசடி செய்துள்ள கும்பலை கண்டறிந்து, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.