"15 வயது வாய் பேச முடியாத சிறுமி.." அத்துமீறிய பள்ளி பேருந்து ஓட்டுநர்! ஆபாச சைகை காட்டி தொந்தரவு

பேருந்து ஓட்டுநர் ஆபாசமான சைகைகள் செய்வதைத் தன் மகளின் தோழிகள் பார்த்து, அவரிடம் கேள்வி எழுப்பியதாக அவர் கூறியுள்ளார்.
Sexual harassment case
Sexual harassment case
Published on
Updated on
2 min read

உத்தரபிரதேசம் கிரேட்டர் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் பகுதியில் 15 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சிறுமியைப் பின்தொடர்ந்து, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 26 வயது பள்ளிப் பேருந்து ஓட்டுநர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு மாதங்களுக்கு முன்பு, பள்ளி மாணவர்கள் ஒரு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக மீரட்டிற்குச் சென்றிருந்தபோது இந்தப் பாலியல் துன்புறுத்தல் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ஜூலை 28 அன்று அந்த மாணவி பள்ளி அதிகாரிகளிடம் தெரிவித்த பின்னரே இது வெளிச்சத்திற்கு வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரிடம் கூறிவிட்டு, ஓட்டுநரான லவ் குஷைப் பணிநீக்கம் செய்துள்ளனர். பள்ளியின் துப்பாக்கிச் சுடும் குழுவில் அங்கம் வகித்த அந்த மாணவி, தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 13 அன்று மற்ற மாணவர்கள் மற்றும் ஒரு விளையாட்டு ஆசிரியருடன் மீரட்டிற்குப் பயணம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பயணத்தின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பார்த்து, கண்ணாடியின் வழியாக ஆட்சேபனைக்குரிய சைகைகளைச் செய்துள்ளார். மேலும் லவ் குஷைப் பள்ளியிலோ, வெளியிலோ அந்தப் பெண்ணைக் காணும்போதெல்லாம், அருவருப்பான சைகைகளைச் செய்துவந்துள்ளார். ஆனால் சிறுமி பயத்தின் காரணமாக யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

பின்னர் “ஜூலை 28 அன்று, சிறுமி ஒரு தோழியுடன் பயிற்சிக்கு வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் குறித்து பள்ளி ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த ஓட்டுநர் தன்னைத் தொடர்ந்து பின்தொடர்வதாகவும், பலமுறை தொலைபேசியில் அழைத்ததாகவும் சிறுமி பகிர்ந்துள்ளார். மீரட் பயணத்தின்போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் தனது தொலைபேசி எண் எழுதப்பட்ட ஒரு குறிப்பை வலுக்கட்டாயமாகக் கொடுத்ததாகவும், ஆனால் தான் உடனடியாக அந்தக் காகிதத்தைக் கிழித்துவிட்டதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்,” என்று பள்ளி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுநரை பணியமர்த்துவதற்கு முன்னர், பள்ளி நிர்வாகம் பின்னணிச் சரிபார்ப்பு நடத்தி, தேவையான அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை ஒருமுறை தகாத முறையில் தொட்டதாகவும், அடிக்கடி தகாத சைகைகளைச் செய்ததாகவும் சிறுமியின் தாய் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். “அவள் அபாயக்குரல் எழுப்ப முயன்றபோதெல்லாம், அந்த நபர் அவளை மிரட்டுவார். என் மகள் மிகவும் பயந்து போயிருந்தாள்,” என்று அவர் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, பேருந்து ஓட்டுநர் ஆபாசமான சைகைகள் செய்வதைத் தன் மகளின் தோழிகள் பார்த்து, அவரிடம் கேள்வி எழுப்பியதாக அவர் கூறியுள்ளார். “அவன் அப்போது மன்னிப்புக் கேட்டான், அவளுடைய நண்பர்களும் அவனைப் போகவிட்டார்கள்,” என்று அந்தத் தாய் கூறியுள்ளார்.

தற்போது அந்த ஓட்டுநர் மீது, பிஎன்எஸ் பிரிவுகள் 74 மற்றும் 351 (2), போக்சோ, மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவியின் தொலைபேசி எண் அவருக்கு எப்படி கிடைத்தது? என்றும் விசாரித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com