

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பள்ளி முதல்வர் கல்லு ரூபா ரெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாருக்கு கிடைத்த “பாபு” என்ற ஒரே ஒரு வார்த்தை முக்கிய துருப்பாக மாறியுள்ளது. அந்த வார்த்தையை வைத்து பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், இறுதியில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரை கைது செய்துள்ளனர். ஆடம்பர வாழ்க்கைக்காக பணம் தேவைப்பட்டதால், முதல்வரின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டு சென்றபோது, அவர் தங்களை அடையாளம் கண்டுகொண்டதால் கொலை செய்ததாக மாணவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நல்கொண்டா மாவட்டம் தனியார் பள்ளியில் முதல்வர் மற்றும் இயக்குநராக கல்லு ரூபா ரெட்டி (48) பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை, அவர் தனது வீட்டில் 27 கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர், ரூபா ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அழைப்பை எடுக்காததால், அக்கம்பக்கத்தினரை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து வீட்டிற்குச் சென்றவர்கள், ரூபா ரெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் துப்பு துலக்க போலீசார் ஐந்து தனிப்படைகளை அமைத்தனர். சம்பவ இடத்தில் தடயவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதுடன், கைரேகைகள், சிசிடிவி காட்சிகள், தொழில்நுட்ப தரவுகள் மற்றும் சந்தேக நபர்களின் நடமாட்டங்கள் தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 80க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது ரூபா ரெட்டி கொலை செய்யப்படுவதற்கு முன்பு தனது அத்தையுடன் தொலைபேசியில் பேசியது போலீசாருக்கு தெரியவந்தது. அந்த உரையாடலின் போது அவர் கடைசியாக “பாபு” என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதான் இந்த வழக்கின் விசாரணையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ரூபா ரெட்டி பள்ளி மாணவர்களை வழக்கமாக “பாபு” என்று அழைப்பார் என்பது அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தபோது தெரியவந்தது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் வகுப்புகள் தொடங்கியபோது, 13 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அவர்களில் இரண்டு மாணவர்கள், ரூபா ரெட்டி உயிரிழந்த பின்னர் திடீரென அதிக அளவில் பணத்தை செலவு செய்து நண்பர்களுக்கு விருந்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த இரு மாணவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் பணத்தை தங்களது பெற்றோர் கொடுத்ததாக அவர்கள் கூறியதாகவும், பின்னர் போலீசாரின் விசாரணையில் ரூபா ரெட்டியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் நல்கொண்டா காவல் கண்காணிப்பாளர் சரத் சந்திர பவார் தெரிவித்துள்ளார்.
போலீசாரின் விசாரணையின்போது, மாணவர்கள் இருவரும் சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ரூபா ரெட்டியின் வீட்டை நோட்டமிட்டுள்ளனர். அவரிடம் பணம் இருப்பது தொடர்பான தகவலை அறிந்த அவர்கள், வீட்டிற்குள் புகுந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக கத்தி மற்றும் கையுறைகளையும் வாங்கியுள்ளனர்.
கொலை நடந்த அன்று, மாணவர்களில் ஒருவர் குரங்கு தொப்பி மற்றும் கையுறைகளை அணிந்துகொண்டு ரூபா ரெட்டியின் வீட்டிற்குள் சென்றதாகவும், மற்றொருவர் வெளியே நின்று கண்காணித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டின் படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2.50 லட்சம் பணத்தை அந்த மாணவர் கண்டெடுத்துள்ளார். ஆனால், திடீரென அவரது தொப்பி நழுவியதால், ரூபா ரெட்டி அவரை அடையாளம் கண்டுகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தாங்கள் சிக்கிக் கொள்வோம் என்று அஞ்சிய மாணவர், ரூபா ரெட்டியை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு 27 கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்குப் பின்னர், மாணவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். தங்களது அடையாளத்தை மறைக்க, ரத்தக்கறை படிந்த ஆடைகள் மற்றும் குரங்கு தொப்பியை புதைத்து ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், போலீசாரின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் கோவாவுக்கு சுற்றுலா சென்றதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களிடமிருந்து ரூ.1.54 லட்சம் ரொக்கம், ஒரு ஐபோன் மற்றும் ரூபா ரெட்டியின் செல்போன் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளில் சிலவற்றில் ரத்தக்கறைகள் இருந்ததாகவும், அவை ஆய்வக பரிசோதனையில் மனித ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மாணவர்களில் ஒருவரின் பையில் ஏற்கெனவே செல்போன் மற்றும் பணம் கண்டெடுக்கப்பட்டதால், அவரை பள்ளி விடுதியில் இருந்து நீக்கி, வீட்டிலிருந்து தினமும் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவராக மாற்றியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் ரூபா ரெட்டி மீது அவருக்கு கோபம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், ஆடம்பர வாழ்க்கைக்கு பழகியிருந்த அந்த மாணவர், எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். இதன் காரணமாகவே மற்றொரு மாணவருடன் இணைந்து முதல்வரின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். ரூபா ரெட்டியின் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இருந்தபோதிலும், சமையலறை கதவு அமைந்திருந்த பகுதியை நோக்கிய கேமரா சில நாட்களுக்கு முன்பே வேறு திசையில் திருப்பப்பட்டிருந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் மாணவர்களின் நடமாட்டம் பதிவாகியிருந்தது. இதுவும் விசாரணைக்கு உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, 48 வயதான பள்ளி முதல்வர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், கடைசி நேரத்தில் அவர் பயன்படுத்திய “பாபு” என்ற ஒற்றை வார்த்தையே போலீசாரின் விசாரணையை பள்ளி மாணவர்கள் பக்கம் திருப்பியுள்ளது. அந்த ஒரு வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய விசாரணை, இறுதியில் இரண்டு 10ஆம் வகுப்பு மாணவர்கள் கைது செய்யப்படும் அளவுக்கு வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.