“Homework எங்க?” - கன்னத்தில் அறைந்த ஆசிரியை.. மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுவன்! சிசிடிவியில் பார்த்து கதறிய பெற்றோர்!

மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதற்கு அரைமணி நேரம் முன்பே குழந்தை இறந்துவிட்டதாக
Teacher slaps boy
Published on
Updated on
2 min read

விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறு வயது சிறுவன் திடீரென உயிரிழந்துள்ளான். வீட்டுப்பாடத்தை முடிக்காததால் பள்ளி ஆசிரியர் சிறுவனை கன்னத்தில் அறைந்துள்ளார். அதனால் தான் மகனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று லிட்டில் கார்டன் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில் நடந்துள்ளது. அங்கு வீட்டுப்பாடத்தைச் செய்யாததற்காக பிரணய் தேஜா என்ற சிறுவனை ஆசிரியர் தாக்கியுள்ளார் அடுத்த சில நொடிகளில் சிறுவன் மயங்கி விழுந்ததாக அவனது குடும்பத்தினர் தெரிவித்தனர். உடனடியாக கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

பின்னர் காவல்துறை மற்றும் வருவாய் அதிகாரிகள், மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மரணத்திற்கான சரியான மருத்துவக் காரணம் பிரேதப் பரிசோதனை மூலம் கண்டறியப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுவனின் குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனையில் குவித்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

குடும்பத்தின் கூற்றுப்படி, சிறுவன் பிரணய், நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டுள்ளான். அப்போது வரை அவனுக்கு எந்த உடல்நல குறைவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். காலை 8 மணியளவில்,  எழுந்த சிறுவன்பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளான். ஆரம்பத்தில் குடும்பத்தினர் அவனை அனுப்பவில்லை, ஆனால் தேர்வு நேரம் நெருங்குவதால் “சரி, விரைவில் தேர்வுகள் வரப்போகின்றன, அதனால் அவனை அனுப்பலாம்” என்று முடிவு செய்து அனுப்பியுள்ளனர். “சரி அப்பா, நான் போகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பள்ளிக்கு சென்றதாக, கண்ணீருடன் சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார் 

குழந்தை வீட்டை விட்டு செல்லும்வரை எந்த அசாதாரண போக்கும் அவனிடம் இல்லை என்றும், ஆனால் சில மணி நேரங்கள் கழித்து அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மதியம் தனது மகனுக்கு ஏதோ நேர்ந்து விட்டது என்று தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், ஆனால் அந்த அழைப்பு பள்ளியில் இருந்து நேரடியாக வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் "பள்ளியிலிருந்து யாரும் என்னை அழைக்கவில்லை," என்றும் அருகில் வேலை செய்யும் உள்ளூர் சமையல்காரர்கள் தான் தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

பள்ளிக்குள் என்ன நடந்தது என்பது குறித்து தங்கள் குடும்பத்தினர் கேட்டபோது, ​​அவர்களுக்கு சிசிடிவி காட்சிகள் காட்டப்பட்டதாகவும், அதில் ஆசிரியர் குழந்தையைத் தாக்குவது தெளிவாகத் தெரிந்ததாகவும் அக்குழந்தையின் தந்தை தெரிவித்தார். "நாங்கள் பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்தபோது, ​​ஆசிரியை அவனைப் பயமுறுத்தியது தெரிந்தது. ஆசிரியை அவனை அடித்ததில், அதிர்ச்சி மற்றும் பயத்தின் காரணமாக அவன் அங்கேயே சரிந்து விழுந்தான்," என்று சிறுவனின் தந்தை குற்றம் சாட்டினார். மேலும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு அரைமணி நேரம் முன்பே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிசிடிவி காட்சியில் ஆசிரியை குழந்தையை அடிப்பது தெரிகிறது. சில நொடிகளில் அந்த குழந்தை அவரது மடியில் சரிந்து விழுகிறது. குழந்தைக்கு வேறு ஏதும் உடல்நல பிரச்சனை இருக்கிறதா என்பது குறித்து கேட்டதற்கு, "என் மகனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றும் "இரவு அவன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தான், இன்று காலையும் நலமாகவே எழுந்தான். அவனுக்கு வைரஸ் காய்ச்சலோ அல்லது வேறு எந்த உடல்நலப் பிரச்சினைகளோ இல்லை என்று தெரிவித்துள்ளார்”.

குழந்தை உயிரிழந்ததற்கு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடுப்பதினார் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், வருவாய் கோட்ட அதிகாரி திலீப் சக்கரவர்த்தியும் மருத்துவமனைக்கு  நேரில் சென்றுள்ளார். ஆந்திரப் பிரதேச பள்ளிக் கல்வித் துறை இந்தச் சம்பவத்தை மிகவும் துரதிர்ஷ்டவசமான மற்றும் வேதனையானது என்று கூறியுள்ளது. "அரசு இந்தச் சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது," என்று கல்வித் துறை கூறியதுடன், சம்பவம் நடந்த உடனேயே, சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி ஒரு முதற்கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தனர் என்றும் அந்த முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், உண்மைகளை முழுமையாக ஆராய மூன்று பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அதேபோல், ஆசிரியர்கள் மாணவர்களிடம் உணர்வுப்பூர்வமாகவும், பொறுப்புடனும், மனிதாபிமானத்துடனும் நடந்துகொள்ளும் வகையில், தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com