பள்ளி மாணவி கர்ப்பம்.. ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை

அதிர்ச்சியடைந்த பெற்றோர், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்
pocso case
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 12-ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் இளைஞரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போலீசார் தெரிவித்த தகவலின்படி, விக்கிரவாண்டி அருகே உள்ள மேல்வெங்கமூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த தரணிதரன் என்ற இளைஞர், சிறுமியிடம் காதல் மற்றும் திருமண குறித்து ஆசை வார்த்தை கூறி நெருங்கிப் பழகியதாகவும், பின்னர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், உடல்நலக்குறைவு காரணமாக சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். மேலும், மருத்துவ அறிக்கைகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், மேல்வெங்கமூர் கிராமத்தைச் சேர்ந்த தரணிதரன் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு செஞ்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com