

அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி மாணவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக உயிரியல் ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜியா மாநிலத்தின் டக்ளஸ்வில் நகரில் உள்ள அலெக்சாண்டர் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த 25 வயதான மாரிஸ் நிக்கோல்ஸ் என்ற உயிரியல் ஆசிரியை, தனது மாணவர்களில் ஒருவருடன் தவறான உறவில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மே 8ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
டக்ளஸ் கவுண்டி சட்ட அமலாக்க அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஆசிரியையான நிக்கோல்ஸ் வெறும் இரண்டு வாரங்களுக்குள் குறைந்தது இரண்டு முறை அதே மாணவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்கள் பள்ளி வளாகத்திலும், பின்னர் நகரின் குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரிலும் நடந்ததாக கூறப்படுகிறது. கைது வாரண்டில் குறிப்பிடப்பட்டதாவது, முதல் சம்பவம் ஏப்ரல் 23ஆம் தேதி பள்ளியின் வகுப்பறைகளுக்கு இடையேயான ஒரு சிறிய அறையில் நடைபெற்றதாகும். பின்னர், டக்ளஸ்வில்லில் உள்ள ஒரு குடியிருப்பு பாதையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் மீண்டும் அந்த மாணவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
இந்த குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, அலெக்சாண்டர் உயர்நிலைப் பள்ளியின் இணையதளத்திலிருந்து நிக்கோல்ஸின் விவரங்கள் உடனடியாக நீக்கப்பட்டன. மேலும், மாணவர்களின் பாதுகாப்பே எங்களின் முதன்மை கவலை என்றும், இத்தகைய நடத்தை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் டக்ளஸ் கவுண்டி பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட பெண் ஆசிரியர் பணியிலிருந்து விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. ஆனால் அப்போது அந்த ஆசிரியர் நிக்கோல்ஸ் தானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
மாரிஸ் நிக்கோல்ஸ், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அலெக்சாண்டர் உயர்நிலைப் பள்ளியில் கால்பந்து செயல்பாட்டு மேலாளராக பணியைத் தொடங்கியதாகவும், பின்னர் உயிரியல் ஆசிரியராக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இரு பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவர் வர்ஜீனியாவில் உள்ள லிபர்ட்டி பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் கற்பித்தல் துறைகளில் பட்டம் பெற்றவர் என்றும் தெரியவந்துள்ளது. தற்போது நிக்கோல்ஸ் மீது “மேற்பார்வை அதிகாரம் கொண்ட நபரால் பாலியல் வன்கொடுமை” என்ற இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மீது 40 ஆயிரம் அமெரிக்க டாலர் பிணை நிர்ணயிக்கப்பட்டு டக்ளஸ் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்க கல்வித்துறையிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.