

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டிருந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், கொல்லத்தைச் சேர்ந்த 40 வயது நபரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசியை சேர்ந்த சிறுமி, தனது தாத்தாவுடன் கேரளாவின் எடத்துவா தேவாலயத்திற்கு தீர்த்த யாத்திரைக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை அதிகாலை, பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணம் செய்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
காவல்துறை தகவலின்படி, தங்கள் இருந்த பெட்டியின் தரையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது இருக்கை அருகே அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்த பெண் பயணி ஒருவர் இந்த சம்பவத்தை கவனித்து உடனடியாக அபாயக் குரல் எழுப்பியுள்ளார். அங்கியிருந்த அலாரத்தை அழுத்தி கூச்சலிட்டுள்ளார். இதற்கிடையில் ரயில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்திருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இறங்கி தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் வாக்குமூலங்களை பதிவு செய்த காவல்துறை, சந்தேக நபர், பெண் பயணியின் வீடியோவில் சிக்கியதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டது காவல்துறை. அதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை கொல்லத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
கோழிக்கடையில் வேலை செய்து வந்த அந்த நபர் மீது, குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் (POCSO) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அவர், சனிக்கிழமை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.