"தவெக மாவட்ட செயலாளர் மீது பாலியல் புகார்"- ஆற்காட்டில் இளம் பெண் மனு!

அப்போது தனது அனுமதியின்றி வீடியோ காட்சிகளின் ஸ்கிரீன் ஷாட்களை
ராணிப்பேட்டை
Published on
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தமிழக வெற்றிக் கழகம் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ஜி. விஜய் மோகன் மீது 34 வயது பெண் ஒருவர் பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு மாசாபேட்டை பகுதியைச் சேர்ந்த பவ்யலட்சுமி (34), ஆற்காடு நகர காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் ஜி. விஜய் மோகனை தொடர்புகொண்டு, தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பின்னர் இருவருக்கும் அடிக்கடி தொடர்பு இருந்து, தொடர்ந்து பேசி பழகியதாகவும், நாளடைவில் அந்த பழக்கம் நெருக்கமான நட்பாக மாறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அப்போது வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் இருவரும் பேசியதாகவும், அப்போது தனது அனுமதியின்றி வீடியோ காட்சிகளின் ஸ்கிரீன் ஷாட்களை ஜி. விஜய் மோகன் எடுத்து வைத்துக்கொண்டதாகவும் புகாரில் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது மகள் குறித்து ஆபாசமான வார்த்தைகளில் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த பவ்யலட்சுமி, ஜி. விஜய் மோகனுடன் இருந்த தொடர்பை துண்டிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அதன்பிறகு தன்னிடம் இருந்ததாகக் கூறப்படும் வீடியோ அழைப்பு ஸ்கிரீன் ஷாட் படங்களை பயன்படுத்தி மிரட்டத் தொடங்கியதாகவும், அவற்றை வெளியிடுவதாக கூறி அச்சுறுத்தியதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜி. விஜய் மோகனுக்கு ஆதரவாக இரண்டு நபர்கள் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டுவதாகவும், இந்த சம்பவங்களால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் பவ்யலட்சுமி தெரிவித்துள்ளார்.

எனவே, தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து மிரட்டியதாகக் கூறப்படும் தவெக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ஜி. விஜய் மோகன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருக்கு ஆதரவாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் இரண்டு நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட ஆற்காடு நகர காவல்துறையினர், மனுவின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். புகாரில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தற்போது காவல்துறை விசாரணைக்கு உட்பட்டவை. இதுவரை அவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை; விசாரணையின் முடிவிலேயே அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் உண்மை நிலை தெளிவாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com